சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட 20 சொகுசு வாகனங்கள் மீட்பு


சட்டவிரோதமான முறையில் ஒன்றிணைக்கப்பட்ட நவீன சொகுசு கார்கள் உள்ளிட்ட 20 வாகனங்களுடன் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட வாகனங்கள் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வாகனங்களை சட்டவிரோதமாக உருவாக்குவதற்கு பொலிஸ் மற்றும் முப்படை உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடவத்தை, கம்பஹா மற்றும் ஜா-எல பிரதேசங்களைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய கடவத்தை, மீகஹவத்தை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் இருந்து இந்த வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறான சுமார் 40 சட்டவிரோத வாகனங்கள் குறித்த தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளன.

பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட இந்த வாகனங்களில் சொகுசு கார்கள், ஜீப் வண்டிகள், வேன்கள், லொறிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, தமது வாகனங்கள் திருடப்பட்டிருந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ அது குறித்து 0112947780 என்ற இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு அறியப்படுத்துமாறு மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் அந்தந்தப் பகுதி நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.