21 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கனேடியப் பிரஜை கைது


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 21 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருளை கடத்திச் செல்ல முயன்ற வெளிநாட்டுப் பயணி ஒருவரை, இன்று வெள்ளிக்கிழமை (03) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 42 வயதுடைய கனடா நாட்டுப் பிரஜை எனவும், அவர் ஒரு கட்டிட ஒப்பந்ததாரர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இருந்து போதைப்பொருளை கொள்வனவு செய்து, பின்னர் ஹாங்கொங் ஊடாக 'கதே பசிபிக்' விமான சேவைக்குச் சொந்தமான CX-611 என்ற விமானத்தில் இன்றையதினம் அதிகாலை 12:30 மணியளவில் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோகிராம் 779 கிராம் எடையுடைய குஷ் போதைப்பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டது. இதன் சந்தைப் பெறுமதி சுமார் 21 கோடியே 77 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் போதைப்பொருள் தொகையை இன்று வெள்ளிக்கிழமை (03) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தி, தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பிலுள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமையகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.