பயிற்சியை நிறைவு செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழா!



களுத்துறை பொலிஸ் கல்லூரியில் அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ் அதிகாரிகளின் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்த 225 பயிற்சியை நிறைவு செய்த பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 55 பயிற்சியை நிறைவு செய்த பொலிஸ் சாரதிகள் உட்பட மொத்தம் 280 அதிகாரிகளின் பட்டமளிப்பு அணிவகுப்பு விழா,  வெள்ளிக்கிழமை (03) களுத்துறை பொலிஸ் கல்லூரியின் அலுவிஹார விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

பயிற்சி காலத்தில் திறமைகளை வெளிப்படுத்திய அதிகாரிகள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

சிறந்த பயிற்சி பொலிஸ் அதிகாரி: ஏ.எம்.ஓ.வி. செனவிரத்ன (இல: 107968)

சிறந்த துப்பாக்கி சுடும் அதிகாரி: டபிள்யூ.ஐ.எஸ். பண்டார (இல: 108087)

சட்டம் தொடர்பான பாடங்களில் சிறந்தவர்: ஆர்.எம்.டி.எஸ். சேனாரத்ன (இல: 107985)

சிறந்த பயிற்சி பொலிஸ் சாரதி: எச்.எம்.ஜி.எம். ஹேரத் (இல: 108106)

திறமையான பயிற்சி பொலிஸ் சாரதி: ஆர்.எம்.எஸ்.டி.டி. லங்கா (இல: 108104)

வெற்றி பெற்ற அதிகாரிகளுக்கு சான்றிதழ்களையும் விருதுகளையும் வழங்கி வைத்த அமைச்சர், பொலிஸ் சேவையில் கண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் செயற்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பொதுமக்களுக்கு நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றுமாறு புதிய அதிகாரிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

விழாவின் சிறப்பம்சமாக பொலிஸ் விசேட அதிரடிப்படை, பொலிஸ் மேற்கத்திய இசைக்குழு, பொலிஸ் மோப்ப நாய் பிரிவு மற்றும் பொலிஸ் கல்லூரியின் கலைக் குழுவினரின் கண்கவர் சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் நிர்வாகத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த, பயிற்சி மற்றும் உயர்மட்ட பயிற்சி பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி சம்பத் குமார லியனகே, ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் சேரம் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் புதிய அதிகாரிகளின் பெற்றோர்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.