களுதேவாலயக் கல்வெட்டு – ஒரு பண்பாட்டுப் பார்வை

செ.கமலநாதன் M.Phil 





































மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச ரீதியான பண்பாட்டு வளர்ச்சியில் சுருதிநூல்முறை, களுதேவாலய கல்வெட்டு எனும் நூல்களும் வேதப்பிட்டி எனும் இடமும் பிரதேச பண்பாட்டியல் தொன்மைக்குச் சான்று. இங்கு களுதேவாலய கல்வெட்டு எனும் நூலுக்கும் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கும் இடையிலான தொடர்புகளினூடாக குறித்த பிரதேசத்தில் வளம்பெற்ற பண்பாட்டம்சங்கள் பற்றி அறிந்து கொள்வது காலத்தின் தேவை.

மட்டக்களப்பு நகரின் தெற்கே சுமார் 30 கிலோமீற்றர் தொலைவில், களுதாவளைக் கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் கோயில், சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலயம் என்று தொன்று தொட்டு அழைக்கப்பட்டு வருகிறது. அவ்வாலயத்துடன் தொடர்புடைய ஒரு வரலாற்று ஆவணமாகக் களுதேவாலயக் கல்வெட்டு எனும் நூல் அமைகிறது.

களுதேவாலக் கல்வெட்டின் கால நிருணயம், அதில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் என்பன தொடர்பான வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் அந்நூல் வெளிக்கொணரும் பண்பாட்டியல் அம்சங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாக உள்ளன. அந்தவகையில் குறித்த ஆலயம் சார்ந்த வழிபாட்டு நடைமுறைகள், வாழ்வியல் செயற்பாடுகள், பிரதேச

ரீதியான உறவுகள் முதலானவை ஆய்வு வலயத்தினுள் உள்ளடக்கத்தக்கவை.

களுதாவளையில் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள சுற்றாடலில் தபசிகளுக்குத் தபோவனம் அமைக்கப்பட்டமையை களுதேவாலயக் கல்வெட்டு '.......முறப்படவார் தாளையடி தபசிக்கட்டு தபோதனர்க்கும் அமைத்தனர்............| என்று குறிப்பிடுகின்றது. தபோதனர் என்பது தவத்தில் வல்லவர்கள் என்பதும், அவர்கள் வாசம் செய்த இடம் தபோவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய தபோவனர் சஞ்சரித்த அல்லது வாசம் செய்த இடமாக அக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள களுவைநகர் என்று குறிப்பிடப்படும் களுதாவளைக் கிராமம் சிறப்புற்றிருக்க வேண்டும்.

அண்மித்த, தொலைதூரக் கிராமங்களுடனும் களுதாவளைக் கிராம மக்கள் நல்லுறவைப் பேணியமை பற்றி களுதேவாலயக் கல்வெட்டில் காணலாம். களுதேவாலயத்தில் (பிள்ளையார் ஆலயத்தில்) கிரியைகளை ஆற்றிய புரோகிதர்கள் களுவாஞ்சிகுடியில் இருந்து நடைப் பயணமாக வந்து ஆலயத்தில் பூசை செய்தமை '......வைத்தங்கே வாழ்நாளில் களுவாஞ்சி ஊரிலிருந்து குருமார்கள் ஐயர் இருவருமாய் வழிநடையாய் வருவதுண்டு.......... அணிபணியாள் சிலரோடு அரன்பூசை செய்து இட்டார்......| என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், குடியிருப்பு, கிரான்குளம், குருக்கள்மடம், செட்டிபாளையம், மாங்காடு, தேற்றாத்தீவு. கொக்கட்டிச்சோலை, நாதனை, சாய்ந்தமருது, நாகமுனை. சேனைக்குடி, எருவில், மகிழூர், கல்லாறு, பாணந்துறை முதலான ஊர்களின் பெயர்களும் அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. போக்குவரத்துத் தொடர்புகள் குறைவான காலத்தில் மேற்கூறிய கிராம மக்களுக்கும் குறித்த கிராம மக்களுமிடையில் நெருங்கிய உறவுநிலை காணப்பட்டமை இங்கு புலப்படுகின்றது. சமயம், கலை ரீதியாக மட்டுமன்றி, தத்துவார்த்த ரீதியிலும் இத்தொடர்பு நிலவியதாகக் கொள்ளமுடியும்.

மட்டக்களப்பு பிரதேசத்தில் நிலைபெற்ற வேதமரபு தழுவிய அத்வைத சிந்தனையின் சமூகவியல் பார்வையையும் களுதேவாலயக் கல்வெட்டில் காணலாம். '...பழுகமை களுவாஞ்சியாரும் சென்று அத்துவிதம் நடத்தலாம்...........| எனும் வரிகளில் பழுகாமம், களுவாஞ்சிகுடி ஆகிய கிராம மக்கள் களுவைநகர் பிள்ளையார் ஆலயத்தில் ஒற்றுமையுடன் பூசைக்குரிய கடமைகளைப் புரியவேண்டுமென்று பணிக்கப்பட்டமை பற்றி இதில் கூறப்பட்டுள்ளது. இங்கு மக்;களிடம் இருக்கவேண்டிய ஒற்றுமை பற்றிக் கூறுவந்த நூலாசிரியர் அதனைச் சுட்டுவதற்கு 'அத்துவிதம்| (அத்துவிதம் என்பதற்கு வேதாந்திகள், வேறுபாடற்ற ஒருமை நிலை என்று பொருள் கொள்வர்) என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளமையைக் காணலாம். எனவே, களுதேவாலயக் கல்வெட்டின் ஆசிரியர் அத்துவிதம் பற்றிய அறிவுடையவராக இருந்திருக்க வேண்டும். அல்லது அத்துவிதம் என்ற சொல், அதன் பொருள் என்பன பற்றி அக்கால மக்கள் அல்லது அறிஞர்கள் அறிந்தவர்களாக, அல்லது குறித்த சொல் நடைமுறையில் இருந்ததாகக் கொள்ளுதல் வேண்டும்.



தொன்மை நாள்களில் மட்டக்களப்பின் பிரதேசங்களில் கொம்புமுறி விளையாட்டு பிரதான இடத்தைப பெற்று வந்துள்ளது. களுதாவளைப் பகுதியில் நடைபெற்று வந்த கொம்புமுறி விளையாட்டுப் பற்றி களுதேவாலயக் கல்வெட்டில்

'......கொம்புகட்டி விளையாட்டு நடக்கும் வேளை

தன குச்சி வெட்டி கேடயத்தில் ஏற்றி வந்து

புரந்துறையில் வைத்து பின் கூக்குரல் இட்டு

மூணுகட்டு வம்மி கொண்டு செல்வார்;

செய்தார் யாவரும் திருப்பாவாடை

இட்டுக் கொண்டு கொம்புச்சந்தி தனில்

தலமது மாதங்கி வாலை திரிபுரசுந்தரிக்குப் பூசையாச்சே

பதிவளர் பூசை கொம்பு விளையாட்டு நடாத்தும் போது....’

என்று குறிப்பி;டப்பட்டுள்ளது. கொம்புமுறி விளையாட்டு பற்றிய அரிய பல தகவல்களை மேற்குறித்த பாடல் வரிகளில் காணலாம். இவ்விளையாட்டை வருடம் ஒருமுறையேனும் விழாவாக நிகழ்த்துவதன் மூலம் பழம்பெருமைமிக்க இப்பண்பாட்டுப் பாரம்பரியத்தை அடுத்த சந்ததிக்கு பரிமாற்றிய பெருமை நமக்குரியதாகும். குறித்த விளையாட்டுத் தொடர்பாக 'கல்வெட்டுகள் – 2’ என்ற நூலில், அந்நூலின் பதிப்பாசிரியரால் பதிவு செய்யப்பட்டுள்ள வியடங்களில் விரைவுடன் கவனம் செலுத்த வேண்டிய தேவை கட்டுரையாளனால் இங்கு வெளிக் கொணரப்படுகிறது. தவிர, கொம்புமுறி விளையாட்டுடன் தொடர்புடைய சான்றுகள் உள்ளிட்ட பண்பாட்டு, காலாசார, தொழில்முறை சார்ந்த சின்னங்களை ஒருமுகப்படுத்திய ஆவணக்காப்பகம் ஒன்றை நிறுவி, நிருவகித்தல் தொடர்பாகவும் சிந்திக்க வேண்டிய தேவையும் இதன்மூலம் உணர்த்தப்படுகிறது.

கொம்புமுறி விளையாட்டுடன் தொடர்புடைய சான்றுகள் உள்ளிட்ட பண்பாட்டு, காலாசார தொழில்முறை சார்ந்த சின்னங்களை ஒருமுகப்படுத்திய ஆவsணக்காப்பகம் ஒன்றை நிறுவி, நிருவகித்தல் தொடர்பாகவும் சிந்திக்க வேண்டிய தேவையும்
இதன்மூலம் உணர்த்தப்படுகிறது.

சங்கமக்குரு, பண்டாரம் முதலானோர் கதிர்காமம் செல்லும் வழியில் குறித்த இடத்தில் வெற்றிலைச் சடங்கு நடைபெற்றமையை அவதானித்தனர் என்பதை களுதேவாலக் கல்வெட்டு 'செல்லும் வழிதனிலே அன்று நாளிகை ஒன்பதிலே களுவைநகர் களுதேவ ஆலயம் வெள்ளிலைச் சடயங்கு செய்யுமிடம் இதுவென்று கண்டு.....’ என்று குறிப்பிடுகிறது. வெற்றிலைச் செய்கையில் களுதாவளைக் கிராமம் தொன்மையானது, தனித்துவமானது. இன்று வெற்றிலைச் செய்கையை மேற்கொள்ளும் கிராமங்களுள் குறித்த கிராமம் முக்கியத்துவம் உடையது. வெள்ளிலைச் சடங்கு என்று கல்வெட்டில் கூறப்படும் வெற்றிலைச் சடங்கு நாளடைவில் கைவிடப்பட்டுவிட்டது எனலாம். எனவே எமது பண்பாட்டின் குறியீடாக அமையும் வெற்றிலைச் சடங்கை இறை வழிபாட்டு நிகழ்வாகக் குறித்த சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் மீண்டும் நடைமுறைப் படுத்துதல் என்பது எமது பண்பாட்டு வரலாற்றின் மீள்பதிப்பாக அமையும்.