
மொனராகலை பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டு கடமையாற்றிய கிராம உத்தியோகத்தரும் பெலவத்தை சீனி தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரும் என இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட நபரால் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின்போதே இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூறாவளியால் வீட்டை முழுமையாக இழந்த நபர் ஒருவருக்கு, அரசாங்கத்தினால் 50 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி இந்த நிவாரணத்தின் முதற்கட்டத் தவணையாக 20 இலட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டபோது, அதிலிருந்து 10 இலட்சம் ரூபாயைச் சந்தேக நபர்கள் இருவரும் இலஞ்சமாகப் பெற்றுள்ளனர்.
அதுமட்டுமல்லாது, எதிர்காலத்தில் வழங்கப்படவுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தவணைப் பணங்களை விடுவிப்பதற்கும் தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் மேலும் 10 இலட்சம் ரூபாய் இலஞ்சமாகக் கோரியுள்ளமை விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இது குறித்து சந்தேக நபர்களிடம் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.






.jpeg)

.jpeg)
.jpeg)


