வனவாஸல ரயில் விபத்து குறித்து மேலதிக தகவல்:பயணி ஒருவர் கார் மற்றும் பெட்டிக்கு இடையில் சிக்கி காயம்!

 வனவாசல மற்றும் ஹுணுபிட்டிய ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று சனிக்கிழமை (16) அதிகாலை ரயிலொன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ரயிலின் பெட்டியொன்று கவிழ்ந்துள்ளதுடன், பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தின்போது, ரயிலில் பயணித்த பயணி ஒருவர் பெட்டியிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளார்.

அவ்வாறு தூக்கி வீசப்பட்ட நபர், கவிழ்ந்த ரயில் பெட்டிக்கும் ரயில் பாதைக்கருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுக்கும் இடையில் சிக்கி காயமடைந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த விபத்து காரணமாக கீழ்நோக்கிய ரயில் பாதை முற்றாக தடைப்பட்டுள்ளது. எனினும், மேல்நோக்கிய ரயில் பாதை மற்றும் மூன்றாவது ரயில் பாதை என்பவற்றினூடான ரயில் சேவைகள் வழமை போல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சம்பவ இடத்தில் இருந்த ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்திற்கு ரயில்வே திணைக்கள அதிகாரிகள் வருகை தந்துள்ளதோடு, விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.