நாடளாவிய ரீதியில் நாளை முதல் பஸ் சேவைகள் 50% ஆகக் குறைக்கப்படும் - தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் .


 நாட்டில் அதிகரித்து வரும் நுகர்வோர் செலவீனங்கள், எரிபொருள் விலையேற்றம் மற்றும் பஸ் கட்டண திருத்தம் வழங்கப்படாமை போன்ற காரணங்களால் நாளை (08) திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் தங்களின் பஸ் சேவைகளை 50 சதவீதத்தால் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதனால் நாளை முதல் நாளாந்தம் பணிக்குச் செல்லும் ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் பொதுமக்களும் பெரும் போக்குவரத்து நெரிசல்களையும் அசௌகரியங்களையும் எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று (07) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன,

நிலவி வரும் கடும் நிதி நெருக்கடி மற்றும் நட்டங்கள் காரணமாக, ஏற்கனவே சுமார் 25 சதவீத (25%) தனியார் பஸ்கள் தங்களின் சேவைகளைத் தன்னிச்சையாக நிறுத்தியுள்ளன.

பஸ் கட்டண திருத்தம் மற்றும் எரிபொருள் நிவாரணங்கள் வழங்கக் கோரி அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு முறையான பதில்கள் கிடைக்காததால், நாளை 8 ஆம் திகதி முதல் பஸ் சேவைகள் திட்டமிட்டபடி கட்டுப்படுத்தப்படும்.

இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை இந்த வாரம் மேலும் தீவிரமடையும். இதன்படி, காலை மற்றும் மாலை வேளைகளில் உள்ள பாடசாலை மற்றும் அலுவலகப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும்.

ஏனைய சாதாரண நேரங்களில் பெரும்பாலான பஸ் பயணங்கள் இரத்து செய்யப்படும். பொதுவாக ஒரு நாளைக்கு நான்கு முறை பயணிக்கும் பஸ்கள், நாளை முதல் மூன்று முறை மட்டுமே பயணிக்கும். இதனால் ஒட்டுமொத்த பஸ் இயக்கம் பாதியாகக் குறையும்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் சம்பந்தப்பட்ட போக்குவரத்து அமைச்சரும் பஸ் உரிமையாளர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை முற்றாக அலட்சியப்படுத்தி வருகிறார்கள்.

ஆண்டுதோறும் ஜூலை மாத தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும் வழக்கமான பஸ் கட்டண திருத்தம் இம்முறை கட்டாயமாக அமுல்படுத்தப்பட வேண்டும். தற்போது அதிகரித்துள்ள பராமரிப்புச் செலவுகளின் அடிப்படையில் பஸ் கட்டணங்களை 20% முதல் 25% வரை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த மாத இறுதியில் டீசல் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், நட்டத்துடன் பஸ் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாது.பஸ் உரிமையாளர்கள் நட்டத்துடன் ஓட முடியாது என்பதால், இதனால் பொதுப் பயணிகளுக்கு ஏற்படும் அனைத்து அசௌகரியங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.