வாகன விலைகள் பன்மடங்கு உயரும் அபாயம்: வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை!


 

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பாவிக்கப்பட்ட வாகனங்களுக்கான 15 சதவீத சுங்கப் பெறுமதி குறைப்பு நீக்கப்படுமாக இருந்தால், சந்தையிலுள்ள வாகனங்களின் விலைகள் தற்போதைய நிலையை விடவும் பன்மடங்கு அதிகரித்து நுகர்வோரை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவரும் ஊடகப் பேச்சாளருமான அரோஷ ரொட்ரிகோ எச்சரித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக நிதி அமைச்சு மற்றும் ஜனாதிபதி ஆகியோர் விசேட கவனம் செலுத்தி, தற்போது நடைமுறையிலுள்ள 15 சதவீத சுங்கப் பெறுமதி குறைப்பைத் தொடர்ந்தும் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (17) புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் சுங்கப் பெறுமதியைத் தீர்மானிப்பது குறித்து 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் திகதியிட்ட 1971ஃ10 எண் கொண்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, புதிய வாகனங்களை இறக்குமதி செய்யும் போது தயாரிப்பாளர்களினால் சமர்ப்பிக்கப்படும் கொள்முதல் பட்டியலின் பெறுமதியே கணக்கில் கொள்ளப்படுகின்றது.

எனினும், எங்களைப் போன்ற இறக்குமதியாளர்கள் பாவிக்கப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்யும் போது, தயாரிப்பாளர்களின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சில்லறை விலையிலிருந்து 15 சதவீதத்தைக் குறைத்து, எஞ்சிய தொகையையே சுங்கப் பெறுமதியாகக் கணக்கிட வேண்டும் என அந்த வர்த்தமானியில் கூறப்பட்டுள்ளது.

இந்த 15 சதவீத பெறுமதி குறைப்பு வழங்கப்படுவதற்கான முக்கிய காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இணையத்தளங்களில் காட்சிப்படுத்தப்படுவது சில்லறை விலையாகும். ஆனால், எமது விநியோகஸ்தர்கள் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரே தடவையில் 50 அல்லது 100 வாகனங்களை மொத்தமாகவே கொள்வனவு செய்கின்றனர். இதன் போது அவர்களுக்கு பெரிய அளவிலான மொத்தக் கொள்முதல் தள்ளுபடி கிடைக்கின்றது.

அதுமட்டுமன்றி, இணையத்தளங்களிலுள்ள சில்லறை விலையானது அந்தந்த நாடுகளின் வீதிப் பயன்பாட்டுக்கான விலையாகும். அதற்குள் முகவர்களின் இலாப வரம்புகள் , விற்பனைக்குப் பின்னரான சேவைகளுக்கான செலவுகள் , உள்ளூர் வரிகள் மற்றும் வாகனப் பதிவுக்கான கட்டணங்கள் உள்ளிட்ட பல செலவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. சர்வதேச வர்த்தகத்தின் போது எமக்குக் கிடைக்காத இவ்வாறான உள்ளூர் செலவுகளைக் கழித்து, தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் உண்மையான மொத்த விலையைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த 15 சதவீத பெறுமதி குறைப்பு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

உண்மையில், தற்போதைய சந்தை நிலைவரங்களின்படி இந்த தள்ளுபடி 15 சதவீதமாக அல்லாமல் 125 அல்லது 130 சதவீதமாகவே அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், நாம் இணையத்தள விலையை விட மிகக் குறைந்த விலையிலேயே வாகனங்களைக் கொள்வனவு செய்கின்றோம்.

ஆனால் சுங்கத் தீர்வையைச் செலுத்தும் போது 15 சதவீத தள்ளுபடி மாத்திரமே எமக்குக் கிடைக்கின்றது. இதனால் அரசாங்கத்திற்கு எந்தவித வருமான இழப்பும் ஏற்படுவதில்லை. மாறாக, நாம் வாங்கும் உண்மையான விலையை விட அதிகப் பெறுமதிக்கு, அரசாங்கத்திற்கு கூடுதலான சுங்கத் தீர்வையையே செலுத்தி வருகின்றோம்.

இவ்வாறானதொரு பின்னணியில், தற்போது நடைமுறையிலுள்ள 15 சதவீத சுங்கப் பெறுமதி குறைப்பை நீக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிகின்றது. ஏற்கனவே வாகன இறக்குமதிக்காக நாம் அளவுக்கு அதிகமான வரிகளைச் செலுத்தி வருகின்றோம். இந்நிலையில், இந்த 15 சதவீத குறைப்பும் நீக்கப்பட்டால் நுகர்வோருக்குப் பாரிய அநீதி இழைக்கப்படும்.

கடந்த ஒன்றரை மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் வாகன இறக்குமதித் துறை மீது தொடர்ச்சியான வரிச்சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. இதன்படி, கடந்த மே மாதம் 01 ஆம் திகதி சொகுசு வரி அதிகரிக்கப்பட்டதுடன், மே மாதம் 15 ஆம் திகதி முதல் சுங்கத் திணைக்களத்தினால் 150 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, அமெரிக்க டொலர் மற்றும் ஜப்பானிய யென் ஆகியவற்றின் பெறுமதிகளும் கணிசமான அளவு உயர்ந்துள்ளன. இந்த அனைத்து வரி அதிகரிப்புகளுடனும் சேர்த்து, தற்போது இந்த 15 சதவீத சுங்கப் பெறுமதி குறைப்பும் நீக்கப்படுமாக இருந்தால், சந்தையில் சாதாரண நுகர்வோரால் ஒரு வாகனத்தைக் கூட கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்படும்.

உதாரணமாக, சந்தையில் தற்போது 70 முதல் 75 இலட்சம் ரூபா வரை விற்பனை செய்யப்படும் சுஸுகி வேகன் ஆர் ரக வாகனத்தின் விலை, இந்தத் தீர்மானத்தால் மேலும் 7 இலட்சம் ரூபாவினால் அதிகரித்து சுமார் 85 இலட்சம் ரூபாவைத் தொடும் அபாயம் காணப்படுகின்றது. அதேபோன்று, ஹொண்டா வெசல் ரக வாகனத்தின் விலை சுமார் 20 இலட்சம் ரூபாவினால் அதிகரித்து, அதன் மொத்த விலை 2 கோடி ரூபாயையும் தாண்டிச் செல்லும் நிலை ஏற்படும். டொயோட்டா யாரில் போன்ற வாகனங்களின் விலைகளும் பல இலட்ச ரூபாவினால் அதிகரிக்கும்.

அடுத்ததாக, வாகனங்களுக்கான தேய்மான மதிப்பு கணக்கிடப்படாமை குறித்தும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும். உதாரணமாக, நாம் வெளிநாடுகளில் இருந்து 10 வருடங்கள் பழமையான குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றினை 20 அல்லது 30 இலட்சம் ரூபாவிற்கு கொள்வனவு செய்தாலும், சுங்கத் திணைக்களம் அதன் புதிய வாகனத்தின் மதிப்பான 1 கோடியே 20 இலட்சம் ரூபாவை அடிப்படையாகக் கொண்டே சுங்கத் தீர்வையை கணக்கிடுகின்றது.

ஆண்டுதோறும் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாகனங்களின் தேய்மானத்தைக் கணக்கிட்டு சுங்கத் தீர்வை குறைக்கப்பட வேண்டும் என்ற நியதி இருந்தும், அது எமக்கு வழங்கப்படுவதில்லை. முறையான வழிமுறையின்படி, எமக்கு வழங்கப்படும் இந்த 15 சதவீத தள்ளுபடிக்கு மேலதிகமாக முறையான தேய்மான மதிப்புக் குறைப்பும் வழங்கப்பட வேண்டும்.