போலி காணி ஆவணங்கள், அடையாள அட்டைகள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது



போலி காணி ஆவணங்கள், போலி தேசிய அடையாள அட்டைகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் போலி உத்தியோகபூர்வ இலச்சினைகள் ஆகியவற்றை தயாரித்து மோசடிகளில் ஈடுபட்டு வந்த மூன்று சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், நேற்று (05) வெள்ளிக்கிழமை பொரளை, என்.எம். பெரேரா மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டு நடத்திய விசேட சோதனையின் போதே இவர்களில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது அந்த வீட்டிலிருந்து காணிப் பதிவகத்திற்குச் சொந்தமான இரண்டு அசல் ஆவணக் கோப்புகள், காணிப் பரிமாற்றங்கள் தொடர்பான போலி ஆவணங்கள், நான்கு போலி தேசிய அடையாள அட்டைகள் மற்றும் பல்வேறு அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான சுமார் 600 போலி உத்தியோகபூர்வ இலச்சினைகள் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்னணு உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இக்குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன், 15 இலட்சம் ரூபா பணம் மற்றும் பல சொத்துக்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளின் மூலம் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில், இந்த மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேகநபர் தெல்கந்த பகுதியில் வைத்துப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 54, 55 மற்றும் 59 வயதுடைய பொரளை, திக்வெல்ல மற்றும் ஹொரணை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நீண்டகாலமாக இந்த போலி ஆவணத் தயாரிப்புப் பின்னணியில் இருந்து பல கோடி ரூபா பெறுமதியான காணிகளை மோசடி செய்துள்ளனரா என்பது குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளைில் ஈடுபட்டு வருகின்றனர்.