
வாதுவை, மொல்லிகொட பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்கு அருகில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதல் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், இச்சம்பவம் குறித்துப் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
ஜூன் 13ஆம் திகதி, குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை அடிப்படையில் வசித்து வந்த இரு வேறு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறே இந்த மோதலுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலின் போது நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை வாதுவை பொலிஸார் 13 ஆம் திகதி கைது செய்திருந்தனர்.
அதன்பின்னர், ஜூன் 14ஆம் திகதி பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், இந்த விவகாரத்தை சுமுகமாகத் தீர்த்து வைப்பதற்காகச் சந்தேகநபரைச் சமரசச் சபைக்கு மாற்றுமாறும் நீதிமன்றம் தற்சமயம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இந்த மோதலின் போது படுகாயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப்புறம்பானவை எனவும், அவ்வாறு எவரும் உயிரிழக்கவில்லை எனவும் பொலிஸார் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
இத்தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசேட புலனாய்வு விசாரணைகளை வாதுவை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.





.jpg)






.jpeg)