
உலகளாவிய காலநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வரும் 'எல் நினோ' காலநிலைத் தாக்கத்தினால், நாட்டில் நடப்பு ஆண்டின் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வழக்கத்தை விட மிகக் கடும் வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
நாடு தற்போது தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காலநிலையை எதிர்கொண்டுள்ள போதிலும், எல் நினோவின் நேரடித் தாக்கங்கள் அடுத்த சில வாரங்களில் நாட்டில் தீவிரமடைய ஆரம்பிக்கும்.
வழமையாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நாட்டில் மழைவீழ்ச்சி குறைவடையும் சாத்தியக்கூறுகள் காணப்படுவது இயல்பானதாகும். எனினும், உலக அளவில் தற்போது உருவாகி வரும் தீவிர 'எல் நினோ' நிலைமைகளால், இம்முறை இந்த இரண்டு மாதங்களிலும் மழைவீழ்ச்சி மிக மிகக் குறைந்தளவிலேயே பதிவாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் நேரடி விளைவாக, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நாட்டின் வெப்பநிலை வழமையான சராசரி அளவை விட மிக அதிகமாக நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்வதற்காக, அரசாங்கத்தின் பல்வேறு உயர்மட்டத் திணைக்களங்களை ஒன்றிணைத்து அவசரக் கூட்டுப் பேச்சுவார்த்தைகளை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மகாவலி அதிகாரசபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, இலங்கை மின்சார சபை மற்றும் சுகாதார அமைச்சு ஆகிய முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு, விசேடமாக நீர் முகாமைத்துவம் மற்றும் விநியோகம் தொடர்பில் முறையான திட்டங்கள் வகுக்கப்படவுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
நடப்பு 2026 ஆம் ஆண்டில் இந்த எல் நினோ தாக்கமானது முன்னெப்பொழுதும் இல்லாதவாறு மிக வலுவடைந்து, வரலாற்றிலேயே மிகக் கடுமையான "சூப்பர் எல் நினோ" ஆக உருவெடுக்கலாம் என சர்வதேச காலநிலை முகவர் நிலையங்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் வழக்கத்திற்கு மாறான பெரும் வெந்நீர் பரப்பு நகர்வதை விஞ்ஞானிகள் அவதானித்துள்ளதுடன், சில பகுதிகளில் வெப்பநிலை வழமையை விட 6 பாகை செல்சியஸூக்கும் அதிகமாக அதிகரித்துள்ளமை உலகளாவிய வானிலை சீர்குலைவின் ஆரம்ப அறிகுறியாகும்.
எதிர்பாராத இந்த வறட்சி மற்றும் அதீத வெப்பநிலை காரணமாக நாட்டின் நீர் வளங்கள், விவசாயத்துறை, மின் உற்பத்தி மற்றும் பொதுச் சுகாதாரம் ஆகிய துறைகள் பெரும் சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம்.
ஐக்கிய நாடுகள் சபையும் விடுத்துள்ள விசேட அறிவிப்பில், இந்த எல் நினோ தாக்கமானது உலகளாவிய காலநிலை மாற்றத்தின் வீரியத்தை மேலும் தீவிரப்படுத்தி, உலகின் பல பகுதிகளில் கடும் வெப்ப அலைகள், வறட்சி மற்றும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடுகளை ஏற்படுத்தலாம் என எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




.jpg)




.jpg)


