முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஊடகச் செயலாளர் சிஐடியினரால் கைது !



அரச கட்டுமானப் பொறியியல் சேவைகள் மற்றும் பொது வசதிகள் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஊடகச் செயலாளராகப் பணியாற்றிய பிரசாத் மஞ்சு என்ற நபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சின் வாகனங்களைத் தனது தனிப்பட்ட ஊடகப் பணிகளுக்காகச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, அரசாங்கத்திற்குப் பாரிய நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி உதய குமார வூட்லர் தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னரே இந்த அடுக்கடி கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபர் தனக்குரிய உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் அதற்கான எரிபொருள் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

அதேநேரம், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பணிகளுக்காக வாடகை அடிப்படையில் பெறப்பட்டிருந்த ஏனைய வாகனங்களையும் தனது ஊடகத் தேவைகளுக்காகப் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் அவர் அரசாங்கத்திற்கு 17 இலட்சத்து 46 ஆயிரம் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளமை அம்பலமாகியுள்ளது.

அரச சொத்துக்களைத் தவறான முறையில் கையாண்டமை மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களை இழைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இந்த சந்தேகநபர், கொழும்பு 02, மலே வீதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதுடன், சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.