
சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் ஆய்வுக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை அனுமதிப்பது தொடர்பில் எழுந்துள்ள இராஜதந்திர சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், புதிய நிலையான மூலோபாய விதிமுறை வரைபு (Standard Operating Procedure - SOP) தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்விதிமுறை வரைபு தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகளின் 70ஆவது ஆண்டு நிறைவு அடுத்த ஆண்டு மிக விமர்சையாகக் கொண்டாடப்படவுள்ளது. இதன்போது சீன அரசாங்கத்தின் உயர்மட்டத் தூதுக்குழுவொன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.
இந்த முக்கியத்துவமிக்க விஜயத்திற்கு முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக இழுபறியிலுள்ள ஆய்வுக் கப்பல் விவகாரத்திற்குத் தீர்வு காண்பதற்கும், ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் திட்டம் உள்ளிட்ட பிரதான இருதரப்புத் திட்டங்களை ஆரம்பிப்பதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இலங்கைக் கடற்பரப்புக்குள் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த ஓராண்டு கால தற்காலிகத் தடை, கடந்த 2024 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தினால் இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், வல்லரசு நாடுகளின் ஆய்வுக் கப்பல்களின் வருகையால் இலங்கைக்கு ஏற்படும் பிராந்திய மற்றும் சர்வதேச இராஜதந்திர நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காக, அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதொரு மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறையை உருவாக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டிருந்தார்.
இதற்கமைய, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேராத் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட குழுவினர், இந்த புதிய நிலையான செயல்பாட்டுச் செயல்முறை விதிமுறைகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அனைத்து நாடுகளுக்கும் பாரபட்சமற்ற வகையில், இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வரைபு உருவாக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
இந்திய அழுத்தம் மற்றும் தற்போதைய நிலைவரம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விதிக்கப்பட்டிருந்த தடைக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், புதிய விதிமுறைகள் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் வரை, ஏற்கனவே நடைமுறையிலுள்ள பழைய விதிமுறைகளின் கீழ் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்குத் தடையில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேராத் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தார். இருப்பினும், தடையின் பின்னரான காலப்பகுதியில் சீன ஆய்வுக் கப்பல்கள் எதுவும் இதுவரை இலங்கைக்கு வருகை தரவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் தொட்டு, ரணில் விக்கிரமசிங்கவின் காலம் வரை சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்த போதெல்லாம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அது அச்சுறுத்தல் எனத் தெரிவித்து புதுடெல்லி கடுமையான இராஜதந்திர அழுத்தங்களை கொழும்புக்கு பிரயோகித்து வந்தது. பிராந்திய புவிசார் அரசியலில் ஏற்பட்ட இந்த நெருக்கடி காரணமாகவே கடந்த அரசாங்கம் தற்காலிகத் தடையை விதிக்க நிர்பந்திக்கப்பட்டது.
இந்நிலையிலேயே, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேராத் தலைமையிலான விசேட குழு, சீனா உட்பட உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கான புதிய மூலோபாய விதிமுறை வரைபை முழுமையாகத் தயாரித்து முடித்துள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டப் பரிசீலனைகள் நிறைவடைந்தவுடன், இந்த புதிய விதிமுறை வரைபு கூடிய விரைவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் பிராந்திய வல்லரசுகளுக்கு இடையிலான போட்டிக்கு மத்தியில், இலங்கை தனது நடுநிலையான வெளியுறவுக் கொள்கையை நிலைநாட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.










.jpg)

