மூதூர் 64ஆம் கட்டைப் பகுதியில் வீடு மீது பஸ் மோதி விபத்து ; சாரதி காயம்


மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 64ஆம் கட்டைப் பகுதியில் இன்று (10) வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 5.45 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில், வீடு ஒன்று கடுமையாக சேதமடைந்ததுடன், பஸ் சாரதி சிறிய காயங்களுக்குள்ளானார்.

கதிர்காமத்திற்கு பயணிகளை ஏற்றிச் சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த தனியார் பஸ், திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் அமைந்திருந்த வீடு ஒன்றின் மீது மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து இடம்பெற்ற வேளையில் வீட்டில் எவரும் இல்லாத காரணத்தால் உயிரிழப்போ அல்லது வேறு எவருக்கும் காயமோ ஏற்படவில்லை. எனினும், காயமடைந்த பஸ் சாரதி மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

பஸ் மோதியதால் வீட்டின் முன்பகுதி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

நீண்ட தூரப் பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். எனினும், விபத்திற்கான உண்மையான காரணம் தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்