இலங்கை வங்கியின் செங்கலடி கிளை ATM/CDM இயந்திரங்கள் அடிக்கடி பழுதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதி: பணத்தை மீட்க ஒரு வாரத்திற்கு மேல் இழுத்தடிப்பதாகக் குற்றச்சாட்டு!
இலங்கை வங்கியின் (BOC) மட்டக்களப்பு, செங்கலடி கிளையில் உள்ள ATM மற்றும் CDM (பணம் வைப்பிலிடும் இயந்திரம்) இயந்திரங்கள் அடிக்கடி திடீரென தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு உள்ளாவதால், தங்களின் அன்றாடப் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியாமல் வாடிக்கையாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இயந்திரக் கோளாறு காரணமாகத் தங்களின் பணம் கணக்கில் ஏறாமல் அல்லது கையில் கிடைக்காமல் இயந்திரத்திற்குள் சிக்கிக்கொள்ளும் போது, அதனை மீளப் பெற்றுக்கொள்வதற்கு வங்கி நிர்வாகம் ஒரு வாரத்திற்கும் மேலாக இழுத்தடிப்பதாகப் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
இப்பகுதிக்கு வருகை தரும் உள்நாட்டு மக்கள் மட்டுமன்றி, கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் தலங்களை நோக்கி வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இந்த இயந்திரக் கோளாறுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச வங்கி அட்டைகளை (International Debit/Credit Cards) பயன்படுத்திப் பணம் எடுக்க முயலும் போது, இயந்திரங்கள் திடீரென செயலிழப்பதால் வெளிநாட்டவர்கள் கையிருப்பில் பணமின்றித் திண்டாடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் பணம் இவ்வாறு சிக்கிக் கொள்ளும் போது, அவர்கள் தங்களின் பயண அட்டவணையை ரத்து செய்துவிட்டு, நாட்கணக்கில் வங்கியின் பின்னால் அலைய வேண்டியுள்ளது. இது நாட்டின் சுற்றுலாத்துறை மீதும், உள்நாட்டு வங்கிச் கட்டமைப்பு மீதும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஒருவித அதிருப்தியையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்த வழிவகுப்பதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
இதே வேளை இப்பகுதியில் உள்ள அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் மற்றும் அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் எனப் பல தரப்பட்ட மக்களும் இந்த செங்கலடி கிளை வங்கியையே பெரிதும் நம்பியுள்ளனர். இவ்வாறான சூழலில், அவசரத் தேவைகளுக்காக (மருத்துவச் செலவுகள், பிள்ளைகளின் கல்விச் செலவுகள், கடன் தவணைகள்) பணத்தை எடுக்க அல்லது வைப்பிலிடச் செல்லும் போது இயந்திரங்கள் பழுதடைவது வாடிக்கையாகிவிட்டது.
இயந்திரத்தில் பணம் சிக்கிய பின், அது குறித்து வங்கியிடம் முறையிட்டால் உடனடியாக தீர்வு வழங்கப்படுவதில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். தங்களின் சொந்தப் பணத்தை எடுப்பதற்கே நாட்கணக்கில் வங்கியின் பின்னால் அலைய வேண்டியுள்ளதால், கடுமையான மன உளைச்சலுக்கும் பொருளாதார ரீதியான நெருக்கடிகளுக்கும் உள்ளாவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
'அவசர மருத்துவத் தேவைக்காகப் பணம் எடுக்கச் சென்ற போது இயந்திரம் பழுதடைந்து கார்டும் பணமும் உள்ளே சிக்கிக் கொண்டது. வங்கியிடம் கேட்டால்இ 'சிஸ்டம் அப்டேட்' ஆக வேண்டும், கொழும்பில் இருந்துதான் சரி செய்ய வேண்டும் எனக் கூறி நாட்களைக் கடத்துகின்றனர். எங்களின் அவசரத் தேவைகளுக்கு யாரிடம் கையேந்துவது?' எனப் பாதிப்புக்குள்ளான உள்ளூர் வாடிக்கையாளர் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இப்பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் வாடிக்கையாளர்கள், தங்களின் பணத்தை மீளப் பெறுவதற்கு செங்கலடி கிளை முகாமையாளர் முதல் கொழும்பு தலைமை அலுவலகம் வரை பல்வேறு மட்டங்களில் கடிதங்களை எழுதி அனுப்ப வேண்டும் என வங்கி ஊழியர்களால் கட்டாயப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சாதாரண பாமர மக்களும், மொழியறியா வெளிநாட்டுப் பயணிகளும் கூட இவ்வாறான கடித நடைமுறைகளைப் பின்பற்றக் கோரப்படுவது தங்களை மேலும் அலைக்கழிப்பதாக அவர்கள் வேதனை வெளியிடுகின்றனர். நவீன டிஜிட்டல் வங்கிச் சேவைகள் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஒரு பொதுத்துறை வங்கி இவ்வாறான பின்தங்கிய மற்றும் மெத்தனமான நடைமுறைகளைக் கையாள்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.
செங்கலடி கிளையில் இந்த ATM/CDM இயந்திரக் கோளாறு என்பது நேற்று இன்று ஆரம்பித்ததல்ல, மாறாக நீண்ட நாட்களாகத் தொடரும் ஒரு தீராத பிரச்சினையாகவே உருவெடுத்துள்ளது.
எனவே, இந்த விடயத்தில் இலங்கை வங்கியின் செங்கலடி முகாமையாளர் , உயர் அதிகாரிகள் மற்றும் பிராந்திய மேலாளர் ஆகியோர் உடனடியாகத் தலையிட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழுதடைந்துள்ள பழைய இயந்திரங்களுக்குப் பதிலாக, நவீன மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த புதிய இயந்திரங்களை அப்பகுதியில் பொருத்துவதற்கும், பணம் சிக்கினால் அதனை 24 மணித்தியாலங்களுக்குள் வாடிக்கையாளர்களின் கணக்கில் மீளச் செலுத்துவதற்கான விரைவான நடைமுறைகளை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அவசரமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.







.jpg)


.jpg)



