மஹிந்த ராஜபக்‌ஷ மீது குற்றச்சாட்டு கூறுவோர், அவரைக் கண்டதும் குனிந்து வணங்குகின்றனர் – சாமர சம்பத்




மஹிந்த ராஜபக்‌ஷ தொடர்பில் பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் அவரை கண்டதும் கீழே வளைந்து குனிந்து வணங்குகின்றனர் என புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான இறக்குமதித் தீர்வை தொடர்பான தீர்மானம், வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஜுலம்பிட்டிய அமரேவுடன் இருந்தார் என்று பிரதி அமைச்சர் வட்டகல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ஆனால் அதே வட்டகல சில தினங்களுக்கு முன்னர் நிகழ்வொன்றில் மஹிந்த ராஜபக்‌ஷவை கண்டு அவரை குனிந்து வணங்குகின்றார். ஆனால் இங்கு வந்து மஹிந்த ராஜபக்‌ஷ தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். முதுகெலும்பு இருக்குமாக இருந்தால் பாராளுமன்றத்தில் கூறுவதை போன்று அவரை காணும் போதும் செயற்பட வேண்டும்.

இப்போது மஹிந்த ராஜபக்‌ஷவை பற்றி கூறுவதில் பிரயோசனமில்லை. அவர் ஓய்வுபெற்று வீட்டில் இருக்கின்றார். வேண்டுமென்றால் அவரின் மகன் இங்கு வரும் போது அவருக்கு நேராக குற்றச்சாட்டுகளை கூறுங்கள். நாங்கள் எப்போதும் சொல்வதை முகத்துக்கு நேராக தெரிவிப்போம் என்றார்.