சிறைச்சாலை நெருக்கடியை உடனடியாக தீர்க்காவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் – தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை


சிறைச்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள கொடூரமான மோதல் சம்பவங்களை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க முடியும். கைதிகளின் நெரிசல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வு காணாவிடின் இந்த நெருக்கடி நிலைமை மேலும் தீவிரமடையும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எச்சரித்துள்ளார்.

18,000 கைதிகள் மட்டுமே இருக்க வேண்டிய சிறைகளில் தற்போது 40,000 க்கும் அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளதே இந்த மோதல்களுக்குப் பின்னணியாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டிய அவர், புதிய சிறைச்சாலைகளை அமைப்பதற்கும் அதிகாரிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் உடனடியாக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று (09) வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நிலைமையைக் கவனிக்கும் போது, இந்தச் சம்பவத்தை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டிருக்கின்றார். சிறைச்சாலை அதிகாரிகள் இந்த மோதலைத் தீர்ப்பதற்குத் தங்களால் இயன்றவரை முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அங்குள்ள கைதிகள் மிகவும் தவறான மற்றும் கொடூரமானதொரு நிலைக்குச் சென்றுள்ளார்கள். ஏனெனில், எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி, அவர்கள் சிறைச்சாலை அதிகாரிகளைத் தாக்கியதுடன் மட்டுமல்லாமல், அவர்களின் உடல் உறுப்புக்களைக் கூட வெட்டியுள்ளதாகத் தெரியவருகிறது. அந்தளவுக்கு இந்த நிலைமை மிகவும் கொடூரமான இடத்துக்கு சென்றுள்ளது.

மற்றொரு பக்கத்தில் பார்த்தால், இதுவொரு பெரிய சோகமான நிலைமையாகும். சிறைச்சாலைகளுக்குள் பிணை வழங்கப்படாததால் ஏற்பட்டுள்ள நிலைமைகள், குறிப்பாக 54ஆம் பிரிவின் கீழ் போதைப்பொருள் குற்றங்களுக்காகக் கைது செய்யப்படுபவர்களுக்குப் பிணை வழங்கப்படாமை காரணமாக சிறைக்குள் ஒரு பெரிய நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. இதனால் சிறைச்சாலைகளுக்குள் பெருமளவிலான கைதிகள் நிரம்பிக் காணப்படுகிறார்கள். பொதுவாக 10 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் வழக்குகளில் பிணை பெறுவதற்கு மேல் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது. அத்துடன் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை வெளிவருவதற்குக் கூட பல மாதங்கள் அல்லது ஒரு வருடம் வரை தாமதமாகிறது.

இந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை மற்றும் பிணை வழங்காமை போன்ற காரணங்களால் சிறைச்சாலைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதனால் கைதிகளுக்கு முறையான வசதிகள் எதுவும் இல்லை. அவர்கள் மாறி மாறி தூங்க வேண்டிய ஒரு மோசமான நிலையும் சில நேரங்களில் ஏற்படுகிறது. இந்தச் சிறைச்சாலை நெருக்கடி நிலைமையை நாம் சரியாகப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். எனவே, அரசாங்கம் என்ற ரீதியில் இதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்பதை உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில், சிறைச்சாலைகளில் தற்போதைய கொள்ளளவின்படி 18,000 கைதிகளை மட்டுமே வைக்க முடியும் என்றாலும், தற்போது 40,000 க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாகவே அறியக் கிடைக்கிறது. அதுமட்டுமன்றி, அவர்களுக்குத் தேவையான மருந்துகளுக்குப் பெரிய தட்டுப்பாடு நிலவுவது போன்ற பல பிரச்சினைகளும் சிறைக்குள் காணப்படுகின்றன.

அதேபோல, மறுபக்கத்தில் சிறைச்சாலை அதிகாரிகளும் பல்வேறு பெரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகிறார்கள். அவர்களின் ஊதியப் பிரச்சினைகள் காரணமாக, அவர்கள் சிறைச்சாலை வேலையை விட்டுவிட்டு வெளியேறும் ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, இந்த இரண்டு பக்கங்களையும் நாம் மிகவும் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒரு தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. புதிய சிறைச்சாலைகளை நிர்மாணிப்பதற்கும், அங்குள்ள உள்கட்டமைப்பு மற்றும் இடவசதிகளை அதிகரிப்பதற்கும், அதேபோல சிறைச்சாலை அதிகாரிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் நிச்சயமாக நிதியை ஒதுக்கீடு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.