
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சுக்கு, 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (07) பிற்பகல் நடைபெற்றது.
சமூக நலன்புரித் திட்டங்களின் கீழ் பயனடையும் ஒவ்வொரு குடும்பமும் உண்மையாகவே வலுவூட்டப்படுகிறதா என்பதை அளவிடக்கூடிய முறையான மதிப்பீட்டு முறையொன்றைத் தயாரித்து, அதன் அடிப்படையில் வலுவான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பொன்றைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு தெரிவித்தார்.
அதன்படி, பல்வேறு நிறுவனங்களினூடாக சிதறிப் போயுள்ள நிதி ஒதுக்கீடுகளை ஒருங்கிணைத்து, துல்லியமாக அடையாளம் காணப்பட்ட குடும்பங்களை இலக்காகக் கொண்டு வறுமையை ஒழிப்பதற்கான விஞ்ஞான பூர்வமான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
இதன்போது, சமூக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட 'சமூக சக்தி' வேலைத்திட்டம் மற்றும் ஏனைய கிராமிய அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள், பிரதேச சபை மட்டத்தில் திட்டங்களுக்காக எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும், அவற்றின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார்.
மேலும், சமூக மேம்பாட்டிற்காக ஏற்றுமதித் திறனைக் கொண்ட தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக, அடையாளம் காணப்பட்ட திட்டங்களுக்கு அமைச்சின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள கடன் மற்றும் உதவிகளை வழங்கும் திட்டம் குறித்து அமைச்சின் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.
அத்துடன், இந்த வருடத்திற்குள் இரண்டு இலட்சம் அஸ்வெசும பயனாளிக் குடும்பங்களை உற்பத்தித்திறன் மிக்க பொருளாதாரச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தி, அவர்களை நிவாரணங்களில் தங்கியிருப்பதில் இருந்து விடுவிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், தற்போது 16,000 குடும்பங்களுக்கு உள-சமூக மற்றும் பொருளாதார ஆதரவை வழங்கும் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, குறைந்த வருமானம் பெறுபவர்களை வெறுமனே நிவாரணங்களில் மாத்திரம் தங்கியிருக்கச் செய்யாமல், அவர்களை பகுதி நேர உழைப்புப் பங்களிப்புகளில் ஈடுபடுத்துவது முக்கியம் என்றும், அதற்காக பெருந்தோட்டத்துறை போன்றவற்றில் உள்ள சாத்தியக்கூறுகள் குறித்தும் சுட்டிக்காட்டினார்.
மேலும், எவ்வித உழைப்புப் பங்களிப்பையும் வழங்க முடியாத மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் அல்லது நாள்பட்ட நோயாளிகளைக் கொண்ட குடும்பங்களை அரசாங்கம் முழுமையாகப் பராமரிக்கும் அதேவேளையில், உழைக்கும் ஆற்றல் கொண்ட ஏனைய பிரிவினர் நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளும் காலப்பகுதியில் நாட்டின் உற்பத்தி செயல்முறைக்கு அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய பங்களிப்பு குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், ஒவ்வொரு அமைச்சும் தனித்தனியாகப் பணம் செலவழிப்பதற்குப் பதிலாக, ஒரு குடும்ப அலகின் தேவைகளைத் துல்லியமாக இனம் கண்டு "குடும்ப அபிவிருத்தித் திட்டம்" ஒன்றை தயாரிப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி போன்ற வெளிநாட்டு உதவிகள் மற்றும் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்தப்படும் வலுவூட்டல் நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
தொழிலுக்குச் செல்லும் தாய்மார்களுக்கு ஒரு நிவாரணமாகவும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காகவும் தற்போது திட்டமிடப்பட்டுள்ள 10 பகல்நேர பராமரிப்பு நிலையங்களை இவ்வருடத்திற்குள் நிறைவு செய்யவும், எதிர்வரும் சில வருடங்களுக்குள் நாடளாவிய ரீதியில் இவ்வாறான 50 நிலையங்களை அமைக்கும் இலக்கை நோக்கி பயணிக்கவும், அதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி இங்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்காக பொலிஸ் நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற பொது இடங்களுக்கு இலகுவாக வந்து செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காக 283 மில்லியன் ரூபா பெறுமதியான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு
வருவதாகவும், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பங்களிப்பு ஓய்வூதிய முறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக மேலும் கவர்ச்சிகரமானதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாளர் எம்.ஏ.எல்.எஸ்.என்.கே. மந்திரிநாயக்க ஆகியோருடன், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் அதிகாரிகள் பலர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.






.jpg)




.jpg)

