நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு விஜயதாசவே பொறுப்பு - சமித்த தேரர் குற்றச்சாட்டு


நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட பாரிய மோதல் சம்பவத்துக்கு முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரே முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும் என மக்கள் உரிமைகள் பாதுகாப்பு தேசிய அமைப்பின் பதலங்கல சமித்த தேரர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மக்கள் உரிமைகள் பாதுகாப்பு தேசிய அமைப்பின் காரியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் உரிமைகள் பாதுகாப்பு தேசிய அமைப்பாக இன்று நாம் இந்த ஊடகவியலாளர் சந்திப்பைக் கூட்டுவதற்கு முதன்மையான காரணம், கடந்த சில நாட்களாக ஊடகங்கள் வாயிலாக நாம் கண்ட அதிர்ச்சியூட்டும் தகவல்களாகும். பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நதுன் சிந்தக எனப்படும் ஹரக் கட்டா என்பவனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு, முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வர் ரகித ராஜபக்ஷ மற்றும் சரித அபேசிங்க ஆகிய நபர்கள் கோடிக்கணக்கான பணத்தைப் பெற்றுக்கொண்டு, இந்நாட்டின் பாதாள உலகத்தை கடுமையாக வளர்த்தெடுத்துள்ளனர் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த மனிதர்கள் மிகவும் நல்லவர்கள், உத்தமர்கள் என்றுதான் நாம் இவ்வளவு காலமும் நினைத்திருந்தோம். ஆனால், உற்றுப் பார்க்கும்போது, மிகக் கொடூரமான பாதாள குழு குற்றவாளிகளை விடவும் ஆபத்தான மனிதர்களாகவே இந்த ரகித ராஜபக்ஷ, சரித அபேசிங்க மற்றும் விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் செயல்பட்டுள்ளனர் என்பது புரிகிறது. இவர்கள் இந்நாட்டுப் பொதுமக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர்.

இவர்களின் செயல்களால் இன்று எத்தனையோ அப்பாவிப் பிள்ளைகள் பாரிய போதைப்பொருள் பழக்கத்துக்;கு அடிமையாகியுள்ளனர். விஜயதாச ராஜபக்ஷ நீதி அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற குற்றங்களைச் செய்துள்ளார் என்று நாம் அரசாங்கத்துக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்று மாகந்துரே மதூஷ் என்பவரைக் கொலை செய்தார்களே, அவர் இவர்களுக்குப் பணம் தரவில்லையா? மாகந்துரே மதூஷ் பணம் தராததால் தான் அவர் கொல்லப்பட்டாரா? கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெரிய மோதல் ஒன்று ஏற்பட்டது. இந்த மோதலுக்கு முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கூறுகிறேன். காரணம், இவர்கள்தான் இத்தகைய கொடூரமான பாதாள உலகக் குழுக்களை வளர்த்தெடுத்தவர்கள்.

ஹரக் கட்டா போன்றவர்கள் பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும்போது, அவர்களைப் பின்புலத்திலிருந்து வளர்த்தெடுத்தவர்கள் இந்த விஜயதாச ராஜபக்ஷவின் மகனும், சரித அபேசிங்கவுமே ஆவர். இவர்கள் வெள்ளை ஆடை அணிந்து கொண்டு, சமூகத்தில் உத்தமர்களைப் போலத் திரிந்து மக்களை ஏமாற்றும் வெள்ளை காலர் குற்றவாளிகளாவர்.

இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் இவர்களது, இவர்களது மனைவியரின் மற்றும் சரித அபேசிங்கவின் குரல் பதிவுகள் பரவி வருகின்றன. எனவே, இவர்களது காலப்பகுதியில் நீதித்துறையின் நிழலில் இடம்பெற்ற இத்தகைய குற்றங்கள் குறித்து முறையான விசாரணைகளை நடத்துமாறு தற்போதைய அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம். இந்த அரசாங்கம் வராமல் இருந்திருந்தால், இவர்கள் இன்னும் தங்களை உத்தமர்களாகவே காட்டிக்கொண்டிருந்திருப்பார்கள்.

தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அவரது அரசாங்கம் இவர்களின் உண்மையான நிர்வாணத்தை வெளிப்படுத்தியதற்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேவேளை, தற்போதைய நீதி அமைச்சரிடம் நாம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம். இந்நாட்டில் சட்டத்தை வளைக்க எவருக்கும் இடமளிக்க வேண்டாம். சட்டம் அனைவருக்கும் பொதுவானது. பாரிய மற்றும் சிறிய அளவிலான குற்றங்களுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் வழக்குகளை விரைவுபடுத்த விசேட நீதிமன்றங்களை நிறுவுங்கள்.

இந்த வழக்குகள் விரைவாக விசாரணைக்கு வரும்போதுதான், ரகித ராஜபக்ஷ, சரித அபேசிங்க போன்ற இவர்களுக்குப் பின்னால் இருந்த பெரிய அரசியல் கரங்கள் மற்றும் வெள்ளையுடை மனிதர்களின் உண்மையான முகங்கள் வெளியில் வரும். எனவே, அரசாங்கம் இது குறித்து முறையான விசாரணைகளை நடத்தி, விரைவில் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றார்.