
நாட்டின் சிறுவர் பாதுகாப்புத் துறையில் நிலவும் பாரதூரமான குறைபாடுகள், தீர்க்கப்படாத முறைப்பாடுகள் மற்றும் தாமதமான நீதித்துறை நடவடிக்கைகள் ஆகியவற்றால் சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நிலையிற்கட்டளை 27/2இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, இலங்கை உள்நாட்டுச் சட்டக் கடமைகளாலும், பல சர்வதேச உடன்பாடுகளுக்கும் பொறுப்புக்கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டின் சிறுவர் பாதுகாப்புத் துறையில் நிலவும் பாரதூரமான இயங்கு தன்மையில் காணப்படும் குறைபாடுகள், தீர்க்கப்படாத முறைப்பாடுகள் மற்றும் தாமதமான நீதித்துறை நடவடிக்கைகள் ஆகியவற்றால் சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது. இதன் பிரகாரம், பின்வரும் கேள்விகளை எழுப்புகிறேன்.
2015.01.01 முதல் 2026.06.30 வரையிலான காலகட்டத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை, இவற்றில் விசாரிக்கப்பட்ட, சட்ட நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கப்பட்ட மற்றும் இன்னும் தீர்க்கப்படாமல் காணப்படும் முறைப்பாடுகளின் எண்ணிக்கைகள் தனித்தனியாக எவ்வளவு?
2026 ஜூன் 30, நிலவரப்படி உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் காணப்படும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் மொத்த எண்ணிக்கை யாது? அந்த வழக்குகளில், கடந்த 5 ஆண்டுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, 5 முதல் 10 ஆண்டுகளுக்கு இடையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் 10 ஆண்டுகளுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கைள் என்பன தனித்தனியாக எவ்வளவு? அந்த வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள விசேட நடவடிக்கைகள் யாது? அந்த வேலைத்திட்டம் எப்போது நடைமுறைப்படுத்தப்படும்?
உயர் நீதிமன்றங்களில் தற்போது நிலுவையில் காணப்படும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் எண்ணிக்கை யாது? குறித்த வழக்குகளை விரைவாக முடிப்பதற்காக, அமைச்சு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து நடைமுறைப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் யாது?
ஜனாதிபதியால் பகிரங்கமாக வாக்குறுதியளிக்கப்பட்டபடி, நீண்டகாலமாக நிலுவையில் காணப்படும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோக முறைப்பாடுகளை உடனடியாக விசாரிப்பதற்கு விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவொன்று அமைக்கப்படுமா? ஆமெனில், அது எப்போது அமைக்கப்படும்?
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சட்டத்தின் விதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்தி, குறித்த அதிகார சபையை சுயாதீனமான, வினைத்திறனான மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய அமைப்பாக மாற்றுவதற்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் யாது?
2025 - 2029ஆம் ஆண்டுக்கான தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்தத் தேவையான விசேட நிபுணர் குழு நியமிக்கப்பட்டு, இக்கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்துவது எப்போது?
சிறார்களை உடல் ரீதியாகத் தண்டிப்பதை ஒழிப்பதற்கான சட்டத் திருத்தங்கள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு இயற்றப்படுவது எப்போது? இதன் மூலம் இலங்கை சர்வதேச ரீதியாக வழங்கியுள்ள கடமைகளை நிறைவேற்றுவது எங்ஙனம்?
தற்போது நிலவும் சிறுவர் பாதுகாப்புச் சூழலை தேசிய சிறுவர் பாதுகாப்பு நெருக்கடியாக அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றதா? ஆமெனில், ஜனாதிபதியின் தலைமையில் துரிதமாக அமைச்சுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்புடன் கூடிய தேசிய நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்படுமா? அது எப்போது ஆரம்பிக்கப்படும்? இந்த கேள்விகளுக்கு முறையான பதிலை எதிர்பார்க்கிறேன் என்றார்.






.jpg)


.jpg)



