சஜித் பிரேமதாச போன்ற ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததையிட்டு அரசாங்கம் என்ற அடிப்படையில் மகிழ்ச்சியடைகிறோம்



சஜித் பிரேமதாச போன்ற ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததையிட்டு அரசாங்கம் என்ற அடிப்படையில் மகிழ்ச்சியடைகிறோம். அவரிடமுள்ள குறைகளை கட்சியின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்ட வேண்டும்.ஐக்கிய மக்கள் சக்தியில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சிறந்தவர்கள் பலர் உள்ளார்கள். அக்கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற பணம் தூய்தாக்கதல் தடை (திருத்தச்) சட்டமூலம், நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை மற்றும் அம்சங்களை உள்ளடக்கிய வகையில் பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம், நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தச் சட்டமூலம் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. இது நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகல்ல.

சட்டமூலம் தொடர்பான விடயங்கள் பற்றி பேசுவதை விடுத்து தயாசிறி ஜயசேகர கைது செய்யப்படுவதை பற்றி பேசுகிறார். பணத்தூயதாக்கல் சட்டம் இயற்றப்பட்டவுடன் தயாசிறி ஜயசேகர கைது செய்யப்படுவார் என்று எதிர்க்கட்சித் தலைவர் கருதுகிறாரா என்றும் தெரியவில்லை.

சஜித் பிரேமதாச போன்ற ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததையிட்டு அரசாங்கம் என்ற அடிப்படையில் மகிழ்ச்சியடைகிறோம்.ஆகவே அவரிடமுள்ள குறைகளை கட்சியின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்ட வேண்டும். பாதாள குழுக்களுடன் தொடர்புடைய கட்சியின் உறுப்பினர்களின் பெயர்களை குறிப்பிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகிறார்.

சரித் அபேசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அவர் பாதாளக் குழுவின் உறுப்பினர்களிடம் இலஞ்சம் பெற்றது நீதிமன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் எங்களிடம் யார் என்று கேள்வி கேட்கிறார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சிறந்தவர்கள் பலர் உள்ளார்கள். அக்கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்.

உலகளாவிய சைபர் தாக்குதல்கள் மற்றும் நிதி மோசடிகளுக்கு மத்தியில் நாடு என்ற ரீதியில் நடைமுறைக்கு சாத்தியமான வகையில் புதிய சட்டங்களை இயற்ற வேண்டும். இதற்கமையவாகவே பணத்தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கலை ஒடுக்குதல் போன்ற சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

நிதி ஒழுக்கத்தை பேணியதன் காரணத்தால் தால் தான் நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ளது. உலக வங்கி இலங்கையை நடுத்தர வருமானம் பெறும் நாடாக அடையாளப்படுத்தியுள்ளது. இதற்கு நாட்டு மக்களுக்கே நன்றி தெரிவிக்க வேண்டும். வரி செலுத்தலை மக்கள் சிறந்த முறையில் தற்போது பின்பற்றுகிறார்கள் என்றார்.