
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் கடந்த காலத்தில் தோல்வி அடைந்த அரசாங்கங்களின் பாதையிலேயே செல்கின்றது. தற்போதைய அரசாங்கத்துக்கு இருக்கும் அதீத பெரும்பான்மையின் அடிப்படையில் எடுக்கப்படும் தீர்மானங்களால் பேரனர்த்தமே நிகழும் ஆபத்துள்ளது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
கொழும்பு இலக்கிய விழாவில் நேற்று முன்தினம் 'கதைகளும் மாநிலங்களும்: புனைவும் புனைவல்லாததுமான தெற்காசிய அரசியல்' எனும் தலைப்பிலான அமர்வு சாவித்ரி ரொட்ரிக்கோவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது எழுப்பபட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆசியாவில் சில வரலறுகள் நாடுகளை செழுமைப்படுத்துவதற்குப் பதிலாக சில இனக்குழுமங்கள் மீதான அச்சங்களை தோற்றுவித்துள்ளன. அந்த வரலாற்று படைப்புக்களை நான் இங்கு வெளிப்படுத்தவில்லை.
அதேநேரம், இந்த நாட்டுக்கு எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநயாக்க சமஷ்டியை அறிமுகப்படுத்தி இந்தாண்டுடன் நூறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 1926ஆம் ஆண்டு மோர்னிங் லீடர் பத்திரிகையில் சமஷ்டியை மையப்படுத்தியும் இலங்கைக்கு அதனடிப்படையிலான ஆட்சிமுறையையும் வலியுறுத்தி ஆறு கட்டுரைகளை அவர் எழுதியிருந்தார்.
1927ஆம் ஆண்டு ஜுலை மாதம் யாழ்ப்பாணத்துக்குச் சென்று யாழ்ப்பாண மக்களை சமஷ்டிமுறை சிறந்தது என்பதை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக 'யாழ்ப்பாண உரை' என்ற நிகழ்வையும் முன்னெடுத்திருந்தார்.
அனைவராலும் சமஷ்டிக்கட்சி என்று அறியப்பட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளராக நான் இருக்கின்றேன். பல்வேறு இனக்குழுமங்கள் வாழும் இந்த நாட்டில் கூட்டுறவு ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்ட ஆட்சிமுறையொன்றை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் முயற்சிக்கின்றோம்.
துரதிஷ்டவசமாக இலங்கை வரலாற்றில் மூன்று அரசியலமைப்புக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் சமஷ்டி முறைமை உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. கடந்த வருடம் எமக்கு பலத்த எதிர்பார்ப்பொன்றிருந்தது.
அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருக்கின்றது, அவர்கள் கடந்த ஆண்டு தேர்தலின்போது முன்வைத்த விஞ்ஞாபனத்தில் 2016ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரையில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை பூர்த்தி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார்கள்.
குறித்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளில் அனைத்து இனக்குழுமங்களின் பிரதிநிதித்துவங்களினதும் பங்கேற்பும் இணக்கப்பாடும் காணப்பட்டிருந்தது.
அவ்வாறான நிலையில் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, ஆண்டொன்று நிறைவடைந்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பு சம்பந்தமான செயற்பாடுகளுக்குரிய எந்த சமிக்ஞைகளையும் நான் காணவில்லை. கடந்த காலத்தில் தோல்வியடைந்த அரசாங்கங்களின் அதேபதையில் தற்போதைய அரசாங்கமும் செல்வதைப் போன்றே தோன்றுகிறது.
ஆனால் இலங்கையின் எதிர்காலத்திற்கு புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மிகவும் முக்கியமானது. அவ்வாறான நிலையில் தமக்குள்ள அதீத பெரும்பான்மையின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் தீர்மானங்களை எடுக்குமாக இருந்தால் அது பேரனர்த்தமாகும் ஆபத்துள்ளது என்றார்.







.jpg)

.jpg)
.jpg)


