"தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை ; காணி விடுவிப்பு குறித்து அரசு பதிலளிக்க வேண்டும்" – சாணக்கியன் MP



நாட்டில் ஆயுத மோதல் முடிவுக்கு வந்து பதினேழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள கணிசமான அளவிலான பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் நிலங்கள் இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன. தேசிய மக்கள் சக்தி வடக்கில் பலாலியில் காணி விடுவிப்பை தேர்தல் விஞ்ஞாபனமாக கூறி வெற்றி பெற்றது ஆனால் அங்கு இன்றளவிலும் பல காணிகள் விடுவிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை (08) நாடாளுமன்ற கேள்வி பதில் நேரத்தின் போது உரையாற்றிய அவர், தேசிய மக்கள் சக்தி வடக்கில் பலாலியில் காணி விடுவிப்பை தேர்தல் விஞ்ஞாபனமாக கூறி வெற்றி பெற்ற போதிலும், அங்கு இன்றளவிலும் பல காணிகள் விடுவிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களின் நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதும், பொதுமக்கள் வாழும் பகுதிகளில் நீண்டகாலமாக இராணுவம் நிலைகொண்டிருப்பதும், சாதாரண சிவிலியன் நிர்வாகத்தைத் தாமதப்படுத்துவதுடன், நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் முயற்சிகளையும் பலவீனப்படுத்துகிறது.

உண்மையான தேசிய பாதுகாப்புத் தேவைகள் தவிர, இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு நிகரான அளவிற்கு இராணுவப் பரவலாக்கம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படுவதும், இராணுவமயமாக்கல் நீக்கப்படுவதும் நல்லிணக்கம், மீள்குடியேற்றம் மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றிற்கு அவசியமானவையாகும். பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் நான் முன்வைத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து, மட்டக்களப்பில் இரண்டு இராணுவ முகாம்கள் விடுவிக்கப்பட்டதை நான் வரவேற்கும் அதேவேளையில், நிலங்கள் விடுவிக்கப்படும் வேகம் மந்தமாக இருப்பதற்கு எதிராகப் பாதிக்கப்பட்ட பல சமூகங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்கள் மற்றும் காணி விடுவிப்புத் தொடர்பாக விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் எழுப்பிய கேள்விகள் மற்றும் முன்வைத்த விபரங்கள் வருமாறு:

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரச நிலங்களின் மொத்த அளவு மாவட்ட ரீதியாக எவ்வளவு?

தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலங்களின் அளவு, இடங்கள் மற்றும் தேதிகள் எவை; இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள நிலங்களின் அளவு எவ்வளவு? மற்றும் எஞ்சியுள்ள நிலங்களை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் காலக்கெடு என்ன?

16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படாமலும், மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முற்றிலுமாக விடுவிக்கப்படாமலும் உள்ள வலிகாமம் வடக்கில், பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதை நிறைவு செய்வதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மயிலிட்டி மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பாகவும், மயிலிட்டி கணிக்கமாதா கோவில், வசந்தபுரம் (வஸாவிலான்) மணம்பிராய் பிள்ளையார் கோவில், புனித செபஸ்தியான் தேவாலயம், மயிலிட்டி ரோமன் கத்தோலிக்க பாடசாலை மற்றும் வஸாவிலான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயம் ஆகியவற்றுக்கான அணுகுமுறையை (போக்குவரத்து வழியை) மீண்டும் வழங்குவதற்கும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபை விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள், 551 வது டிவிஷன் (பிரிவு) பகுதியில் உள்ள நிலங்கள், மற்றும் இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயம், இரணைமடு சந்தி மற்றும் விவசாயத் திணைக்களம் ஆகியவற்றை பாதிக்கும் வகையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவில் எஞ்சியுள்ள 59 ஏக்கர் பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மயிலிட்டி துறை பகுதியில் 700 குடும்பங்களுக்குச் சொந்தமான 556 ஏக்கர் காணிகள் இன்றளவில் விடுவிக்கப்படவில்லை.

கலைமகள் பாடசாலைக்கு சொந்தமான மைதானம் விடுவிக்கப்படவில்லை.

பலாலி தெற்கு,கிழக்கு, வடக்கு, மேற்கு மற்றும் வடக்கிழக்கு பகுதியில் 300 குடும்பங்களுக்குச் சொந்தமான 556 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவில்லை.

கரைச்சி நூலகம் விஸ்தரிப்புக்கும் காணி விடுவிக்கப்படவில்லை.

இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சொந்தமான காணி கேப்பாபிளவு பகுதியில் 59.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவில்லை.

கேப்பாபிளவு பகுதியில் உள்ளவர்களுக்கு மாற்று காணி வழங்கப்பட்டதாக குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. சீனியார்மோட்டை பகுதியில் 44 பேருக்கு தற்காலிக காணிகளே வழங்கப பட்டுள்ளன.அதே போல் குரும்பைச்சிட்டி பகுதியில் இந்து மயானத்துக்குரிய காணி விடுவிக்கப்படவில்லை.

தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில், இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதை விரைவுபடுத்துவதாகவும், பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீள்குடியேற்றத்திற்கு வசதி செய்வதாகவும் உறுதியளித்திருந்ததை நினைவூட்டிய சாணக்கியன் எம்பி, இந்த கேள்விகளுக்கு விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரிடமிருந்து முறையான பதிலை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.