
13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டபோது அதில் சமஷ்டி தன்மை காணப்படுவதாகக் கூறிய உயர் நீதிமன்றம், அதற்குச் சர்வஜன வாக்கெடுப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் என தெரிவித்ததை சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எனவே அரசாங்கம் முன்வைத்துள்ள 22 ஆவது திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற முடியாது எனவும் குறிப்பிட்டார்.
சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துதல், மக்கள் ஆணையைப் பாதுகாத்தல் மற்றும் உலகளாவிய முக்கிய நீதிமன்றத் தீர்ப்புகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ரணில் விக்கிரமசிங்க, கடந்த திங்கட்கிழமை சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், 1972ஆம் ஆண்டின் அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மக்களின் இறையாண்மை தேசிய அரசப் பேரவைக்கே வழங்கப்பட்டிருந்த போதிலும், 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 3ஆம் அத்தியாயத்தின் மூலம் அந்த ஆணை மீண்டும் மக்களிடமே ஒப்படைக்க ஜே.ஆர். ஜெயவர்தன நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி சட்டமன்ற, நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரங்கள் அனைத்தும் மக்களின் இறையாண்மை அதிகாரத்தின் அங்கங்களாகக் கருதப்பட வேண்டும் என்பது 78ஆம் ஆண்டு அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 4ஆம் பிரிவின் கீழ் மக்களின் இறையாண்மை பாராளுமன்றத்தின் மூலமாகவும், நிர்வாக அதிகாரம் ஜனாதிபதி மூலமாகவும், நீதித்துறை அதிகாரம் நீதிமன்றக் கட்டமைப்பின் மூலமாகவும் செயற்படுத்தப்பட வழியமைக்கப்பட்டுள்ளது.
1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பானது பாராளுமன்றத்தையும் ஜனாதிபதியையும் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை மக்களுக்கே வழங்கியுள்ளதால், மக்களின் இந்த அதிகாரத்தைப் பாதுகாக்க நீதித்துறை முற்றிலும் சுயாதீனமாக இயங்குவது அத்தியாவசியமானது.
பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தையோ அல்லது ஜனாதிபதியின் பதவிக்காலத்தையோ நீடிப்பதற்கு கட்டாயமாகச் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமென அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிபதிகளின் சேவைக் காலத்தை நீடிப்பதற்கும் மக்கள் ஆணை பெறப்பட வேண்டும் என முந்தைய உயர் நீதிமன்றத் தீர்ப்புகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1982ஆம் ஆண்டு பாராளுமன்றக் காலத்தை நீடித்தபோதும் மக்கள் தீர்ப்பு அவசியமென வலியுறுத்தப்பட்டது.
இந்த பின்னணியில், தற்போதைய ஜனாதிபதி மக்களிடம் ஆட்சி அதிகாரத்திற்கான ஆணையைக் கேட்டபோது நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது குறித்து எதனையும் குறிப்பிடவில்லை. புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கே அவர் ஆணை கோரினார்.
'வளமுடைய நாடு - அழகிய வாழ்வு' என்ற அவர்களின் கொள்கைப் பிரகடனத்திலும் இதுபற்றி எந்தக் குறிப்பும் இல்லாததால், தற்போதைய நடவடிக்கையானது அரசாங்கத்தின் பதவிக்காலத்தை நீடித்துக்கொள்வதற்கான முதற்கட்ட முயற்சியேயாகும் என ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.



.jpg)
.jpg)

.jpg)

.jpg)
.jpg)


.jpg)