தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு முயற்சி ; 23 வயது சந்தேகநபர் கைது



தெஹிவளை பகுதியில் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பில் 23 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 4ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்தை வீதி பகுதியில் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர் நேற்று (09) மாலை அத்துருகிரிய, ஹபரகட பகுதியில் வைத்து ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.