.jpeg)
நீண்டகாலமாக சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும், பிரதேச மக்களால் ‘ஸ்பைடர் வுமன்’ (சிலந்திப் பெண்) என அழைக்கப்படும் பெண் ஒருவர் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் ஓகஸ்ட் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு (76448) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த வியாழக்கிழமை (13) மாலை சாய்ந்தமருது பொலிஸாரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, கல்முனை புறநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து 2 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 40 வயதுடைய பெண் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு பிள்ளையின் தாயான குறித்த பெண், தனது உறவினர்களின் உதவியுடன் நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களையும் உள்ளடக்கிய பொலிஸ் குழுவினர் மாறுவேடத்தில் சென்று மேற்கொண்ட நடவடிக்கையின் போது சந்தேகநபரைச் சுற்றிவளைத்துக் கைது செய்துள்ளனர். தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் இதற்கு முன்னரும் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டிருந்ததாகவும், நீண்டகாலமாக பொலிஸாரின் கண்காணிப்பில் இருந்து வந்ததாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் ஆலோசனையிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வி. பிரகலாதன் தலைமையில், குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வி. ஜீவரத்தினம், பொலிஸ் உத்தியோகத்தர்களான அதுவார் (91775), நிவேதன் (94680), பெண் பொலிஸ் உத்தியோகத்தர் சாமிலி (10669) உள்ளிட்ட குழுவினர் இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




.jpg)

.jpg)





.jpg)