நாடு முழுவதும் 2,500 மில்லியன் ரூபா செலவில் 100க்கும் மேற்பட்ட வருமானம் ஈட்டும் திட்டங்கள் ஆரம்பம்


நாடு முழுவதும் 2,500 மில்லியன் ரூபா செலவில் சுய வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், 2,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 100க்கும் மேற்பட்ட வருமானம் ஈட்டும் வளர்ச்சித் திட்டங்கள் இன்று (14) நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இவ்வாண்டின் வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் உள்ளூராட்சி மன்றங்களின் செயல்திறன் அடிப்படையிலான மூலதன ஒதுக்கீட்டிற்காகவே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வர்த்தக வளாகங்கள், சுகாதாரமான இறைச்சிக் கடைகள், கட்டடப் பொருட்கள், பரிசோதனைக்கூடங்கள், கொன்கிரீட் உற்பத்தி நிலையங்கள், குடிநீர் மற்றும் விவசாய வளர்ச்சித் திட்டங்கள், நெல் உலர்த்தும் மையங்கள், சுற்றுலா வசதிகள் மேம்பாடு, ஹோட்டல்கள், சூரிய சக்தி மின் தகடுகள், முன்பள்ளிகள், சிறுவர் பூங்காக்கள், கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி மையங்கள், கோளரங்கங்கள், மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் மற்றும் வாகன பராமரிப்பு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

மேலும், இச்செயற்றிட்டங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ருவன் செனரத், குறைந்த வருமானமுடைய உள்ளூராட்சி மன்றங்கள் சொந்தமாக வருமானத்தை ஈட்டிக்கொள்வதையே அரசாங்கம் முதன்மைத் திட்டமாகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், கிராமப்புறப் பாலங்கள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள 1,050 மில்லியன் ரூபாய் நிதியில், 880 கிராமப் பாலங்களை அபிவிருத்தி செய்யும் பணிகள் திட்டமிடப்பட்டு, அவற்றில் சுமார் 100 பாலங்களுக்கான கட்டுமானப் பணிகள் ஏற்கெனவே இரண்டு வாரங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாகச் நடைபெற்று வருகிறது என்றார்.