4 வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம் : அறிக்கை சமர்ப்பிக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவுறுத்து



வத்தேகம பகுதியில் 4 வயது சிறுமி வீதியில் கைவிடப்பட்ட சம்பவம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 13ஆம் திகதி வத்தேகம, முதுனேகமட பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அச்சிறுமி, தற்போது கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் சிறுமியின் 37 வயதான தாய் மற்றும் அவரது 28 வயதான காதலன் ஆகிய இருவரையும் நேற்று (14) ஹாலி-எல பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் அச்சிறுமியைக் கொடூரமாகத் தாக்கியுள்ளமை தொடர்பான தகவல்கள் விசாரணைகளில் வெளிவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்காலப் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்து வருவதாகப் பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்ஷன தெரிவித்துள்ளார்.