இவ்வாறாக தப்பிச் சென்ற கைதிகள் மீண்டும் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடுவது நாட்டின் பொதுப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தேசிய தணிக்கை அலுவலகத்தின் அறிக்கையிலேயே, சிறைச்சாலைகள் சார்ந்த பல சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
அந்த அறிக்கையின்படி, கடந்த 6 ஆண்டுகளில் தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்னர் சிறைகளிலிருந்தோ அல்லது சிறைக்காவலிலிருந்தோ தப்பிச் சென்ற கைதிகள் மற்றும் சந்தேக நபர்களின் எண்ணிக்கை 1,181 ஆகும். அவர்களுள் 709 பேர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது தணிக்கை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன், தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட 2025ஆம் ஆண்டில் நாட்டின் 22 சிறைச்சாலைகளிலிருந்து 5,083 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், குறித்த காலப்பகுதியில் 2,432 கையடக்கத் தொலைபேசி பேட்டரிகள், 970 மின்னேற்றிகள், 4,149 சிம் அட்டைகள் மற்றும் 3,111 ஏனைய உபகரணங்களும் சிறைச்சாலைகளுக்குள்ளிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான மின்னணு உபகரணங்கள் கைதிகளின் கரங்களுக்குச் செல்வதைத் தடுக்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், இவை தடுத்து வைக்கப்பட்டிருப்போரைச் சென்றடைவதால் சட்டவிரோதச் செயல்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கைகள் தீவிரமடைந்து பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் தணிக்கை அலுவலகம் கவலை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் கடந்த ஆண்டில் மட்டும் 825 பெண் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மெகசின் மற்றும் ரிமாண்ட் சிறைச்சாலைகளில் கைதிகள் மற்றும் சந்தேக நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அடிப்படை வசதிகளற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அதிகாரிகள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நிவர்த்தி செய்யும் வகையில் மகர மற்றும் வட்டரக்க சிறைச்சாலைகளின் வசதிகளை மேலுமொரு கட்டமாக மேம்படுத்தி, வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவிலுள்ள பெண் கைதிகளை வட்டரக்க சிறைச்சாலைக்கும், சந்தேக நபர்களை மகர சிறைச்சாலைக்கும் இடமாற்றம் செய்வதன் மூலம் இந்த நெரிசலைக் குறைக்க முடியும் என்றும் தணிக்கை அறிக்கை பரிந்துரைத்துள்ளது.





.jpg)

.jpg)





.jpg)