நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரித்தால் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 67 வயதாக அதிகரிக்க வேண்டும் – சமன் ரத்னப்பிரிய



அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு மதத்தலைவர்கள் நீதித்துறையை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் அரசாங்கத்தில் இருப்பவர்கள் மாத்திரமே இதற்கு ஆதரவளிக்கின்றனர். இதன் மூலம் நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிக்க முயற்சிக்கும் அரசாங்கத்தின் நோக்கம் தெளிவாகிறது. அதேநேரம் நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிப்பதாக இருந்தால் அனைத்து அரச ஊழியர்களின் வயதெல்லையையும் அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கத்தின் தலைவருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களின் தேசிய சம்மேளனம் இன்று (13) கொழும்பில் நடத்திய ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நீதிபதிகளின் வயதெல்லையை அதிகாரிக்கும் வகையில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் யாருடனும் கலந்துரையாடாமல் அரசாங்கம் அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொண்டது. பின்னர் அதனை வர்த்தமானியில் பிரசுரித்துள்ளது. அடுத்தபடியாக எதிர்வரும் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாகவே தெரியவருகிறது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும்போது, அந்த தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

அதேபோன்று நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிக்கும் தீர்மானத்துக்கு அரசாங்கம் அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொண்ட பின்னரே மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட ஏனைய மதத்தலைவர்களை சந்தித்து இதுதொடர்பில் கலந்துரையாடி வருகிறது.

சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்த பின்னரே அரசாங்கம் இந்த நடவடிக்கையை ஆரம்பித்தது. எவ்வாறு இருந்தாலும் அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்துக்கு அரசாங்க தரப்பினரை தவிர ஏனைய அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதேநேரம் நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கம் தெரிவிக்கும் நீதிமன்ற பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கிறதா? அரசாங்கம் எதிர்பார்க்கும் வழக்கு விசாரணைகளை துரிதமாக விசாரித்து முடிப்பதற்கு குறைந்தபட்சம் இந்த நீதிமன்றங்களில் நிலவி வரும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்தாலே இந்த பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு பெற்றுக்கொள்ளலாம். அதனை அரசாங்கம் செய்வதில்லை. அப்படியானால் நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் நோக்கம் தெளிவாகும்.

அத்துடன் அரச துறைகளில் பாரியளவில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக சுகாதார துறையில் பாரியளவில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அதனாலே டெங்கு நோயை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது. பொது சுகாதார அதிகாரிகள் 500 பேரே இருக்கிறார்கள். தாதியர்கள் துறையில் 30 ஆயிரம் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அதேபோன்று வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள் என பல வெற்றிடங்கள் நிலவி வருகின்றன.

அதனால் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக அரசாங்கம் நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், அரச துறைகளின் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கான அனைத்து அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 67 வயது வரை அதிகரிக்கவேண்டும். அதேபோன்று தனியார் துறையினரின் ஓய்வுபெறும் வயதெல்லையையும் அதிகரிக்க வேண்டும் என்றார்.