நீண்டகாலமாக தொலைபேசி கம்பிகளைத் திருடி விற்ற கும்பல் சிக்கியது – 6 பேர் கைது


நீண்டகாலமாக தொலைபேசி கம்பிகளை வெட்டி விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த ஆறு சந்தேகநபர்களை அநுராதபுரம் வலய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அநுராதபுரம் பகுதியில் தொலைபேசி கம்பிகள் திருடப்படுவது தொடர்பாக ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தினால் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இம்முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில், பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, அநுராதபுரம் பொலிஸ் வலயத்திற்குட்பட்ட பரசன்கஸ்வெவ பகுதியில் நேற்று புதன்கிழமை (19) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இச் சந்தேகநபர்கள் அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அநுராதபுரம், பரசன்கஸ்வெவ மற்றும் சாலியபுர ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25, 29, 31, 34, 35 மற்றும் 37 வயதுடையவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இக் கும்பலினர் அநுராதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாகத் தொலைபேசி கம்பிகளை வெட்டி சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்துவந்துள்ளமை மேலதிக விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக அநுராதபுரம் வலய குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை, விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.