8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்கள் விற்பனை : 5 சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல்!



கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துக்குச் சொந்தமான 8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்களை 47,000 ரூபா என்ற குறைந்த விலைக்கு வெளி நபர் ஒருவருக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இச்சந்தேக நபர்கள் 5 பேரும் இன்று சனிக்கிழமை (15) கடுவலை நீதவான் அருண புத்ததாச முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டுக்கான தமிழ் மொழி பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பாடநூல்கள் அடங்கலாக 19,892 புத்தகங்கள் காணாமல் போனமை தொடர்பில் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் அண்மையில் தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளையடுத்தே இச்சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, குறித்த பாடநூல் தொகுதியை ஏற்றிச் சென்ற சரக்கு ஊர்தி ஓட்டுநர், அத்தனை புத்தகங்களையும் பழைய காகிதங்கள் கொள்முதல் செய்யும் நபர் ஒருவருக்கு விற்று 47,000 ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டமை தெரியவந்துள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் தலங்கம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.