நீதித்துறையை அரசியலாக்கும் முயற்சிகளைக் கைவிட்டு, தைரியமிருந்தால் சர்வசன வாக்கெடுப்பை நடத்தி மக்களின் தீர்ப்பைப் பெறுமாறும் அவர் ஜனாதிபதிக்கு சவால் விடுத்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்யப்படுவதாக சர்வதேச மற்றும் உள்நாட்டு மட்டங்களில் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து சர்வசன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு உள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி அரச அதிகாரத்தையும் நீதித்துறையையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பதாகவும் ஹர்ஷண ராஜகருணா குற்றஞ்சாட்டினார்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச சட்டத்தரணிகள் அமைப்புகள் உள்ளிட்ட தரப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், உள்நாட்டில் மகாநாயக்க தேரர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களும் அரசாங்கத்தால் கவனத்தில் கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட நெல் கொள்முதல் விலையை அதிகரித்தல், மின்சாரக் கட்டணத்தைக் குறைத்தல், எரிபொருள் விலைச் சூத்திரத்தை நீக்குதல் மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, நீதித்துறை தொடர்பான நடவடிக்கைகளுக்கே அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
நீதித்துறை நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் 22ஆவது திருத்தம் கொண்டுவரப்படுவதாக அரசாங்கம் கூறினாலும், அதன்மூலம் வழக்குகள் விரைவுபடுத்தப்படவோ குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ மாட்டார்கள் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சியில் இருந்தபோது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் குரல் கொடுத்த அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதியான பின்னர் மாறுபட்ட நிலைப்பாட்டில் செயற்படுவதாகவும் ஹர்ஷண ராஜகருணா விமர்சித்தார்.
“பதவியை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் முடிவெடுக்கத் தயங்கினால், அந்த முடிவை மக்களிடம் விட்டுவிடுங்கள். தைரியமிருந்தால் சர்வசன வாக்கெடுப்புக்குச் சென்று மக்களின் தீர்ப்பைப் பெறுங்கள்” என அவர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தால் எதிர்காலத்தில் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் நீதித்துறைக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனத் தெரிவித்த ஹர்ஷண ராஜகருணா, குறித்த முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


.jpeg)


.jpg)


.jpg)




