.jpg)
வைத்தியப் பிரிவுகளுக்கு இடையே மோதல்களை உருவாக்கி, வைத்திய சேவை மற்றும் இலவச சுகாதாரக் கட்டமைப்பை நெருக்கடிக்குள் தள்ளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சாடியுள்ளது.
நிபுணத்துவ வைத்தியர்களுக்கும் ஏனைய வைத்திய பிரிவினருக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் அரசியல் அடிப்படையிலான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் நிலவிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தன்மைக்கு மத்தியில் நிபுணத்துவ வைத்யர்கள் உட்பட வைத்தியர்களை நாட்டில் தப்பவைப்பது சவாலாக இருந்தது. இதற்குத் தீர்வுகாண சுகாதார அமைச்சு மற்றும் வைத்திய தொழிற்சங்கங்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.
அக் குழுவில், அனைத்து வைத்திய பிரிவினரையும் நாட்டில் தக்கவைப்பதற்காக "இலங்கை வைத்திய சேவை" என்ற பெயரில் புதிய சேவைப் பிரிவு மற்றும் சம்பளக் கட்டமைப்பை உருவாக்க உடன்பாடு எட்டப்பட்டது.
2026 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் போதும், நிபுணத்துவ வைத்தியர்கள் உட்பட அனைத்து வைத்தியர்களுக்குமாகத் தனிச் சேவைப் பிரிவு உருவாக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், தற்போது நிபுணத்துவ வைத்தியர்களுக்கு மட்டும் தனியாகச் சேவைப் பிரிவை உருவாக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இது வைத்தியப் பிரிவினரிடையே பிளவை ஏற்படுத்தும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒரு பிரிவினருக்கு மட்டும் தனியான சேவைப் பிரமாணக் குறிப்பை உருவாக்குவது இலவச சுகாதாரத்திற்கும் நோயாளி பராமரிப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த யோசனையைத் தாம் ஏற்கப்போவதில்லை என அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான தமது வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வக் கருத்துகளைக் குழுவிடம் சமர்ப்பித்துள்ள போதிலும், குழு அறிக்கையின் பிரதியை அதிகாரிகள் இதுவரை தமக்கு வழங்கவில்லை என்றும் அச்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த நிலைமை குறித்து மேலதிக தீர்மானங்களை மேற்கொள்வதற்காக மாகாண மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் அவசரக் கூட்டம் கடந்த 28ஆம் திகதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிபுணத்துவ வைத்தியர்கள் துணைக் குழுவின் அவசரக் கூட்டம் நாளை திங்கட்கிழமை (31) நடைபெறவுள்ளது.
வைத்தியர்களின் உரிமைகளையும் வரப்பிரசாதங்களையும் பாதுகாத்து, ஒற்றுமையுடன் சேவையாற்றக்கூடிய "இலங்கை வைத்திய சேவையை" உருவாக்குவதற்கான தீர்மானமிக்க முடிவுகள் நாளைய கூட்டத்தில் எடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.



.jpg)
.jpg)






.jpg)
