“ஒரே கட்சி ஆட்சி செய்யும் சர்வாதிகார யுகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்” – சஜித் குற்றச்சாட்டு


நாட்டில் ஒரே கட்சி ஆட்சி செய்யும் சர்வாதிகார யுகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமே தவிர, மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

லுணுகம்வெஹெரையில் நடைபெற்ற விவசாயிகள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர்,

நாட்டில் வறுமை 30 - 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. வேலையின்மை மற்றும் பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். இவற்றுக்குத் தீர்வு காண்பதற்காகவே மக்கள் அரசாங்கத்திற்குச் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கி வெற்றிபெறச் செய்தனர்.

இருப்பினும், தேர்தல் காலத்தில் நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவதாகக் கூறி வாக்குகளைப் பெற்ற தற்போதைய அரசாங்கம் இன்று ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய 137 ரூபா செலவாகும் நிலையில் 120 ரூபா மாத்திரமே வழங்கி விவசாயிகளுக்கு கிலோவுக்கு 17 ரூபா நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான தீவிரப் பொருளாதார மற்றும் விவசாயப் பிரச்சினைகள் நிலவும் சூழலில், அவற்றுக்குத் தீர்வு காணாமல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதிலேயே அரசாங்கம் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால் நாட்டின் பணவீக்கம் குறையப்போவதோ அல்லது புதிய தொழிற்சாலைகள் உருவாகப்போவதோ இல்லை. 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' எனக் கூறி மக்களை ஏமாற்றிய அரசு, இன்று சர்வதேச நாணய நிதியத்தின் கீழ்ப்படிதலுள்ள அடிமையாக மாறியுள்ளது.

கிராம மட்டத்திலான அமைப்புகள் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்குக் கூடத் தகுதியின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படாமல், பெலவத்தையிலுள்ள ஆளுங்கட்சிக் அலுவலகத்தின் பெயர் பட்டியல்களின் அடிப்படையிலேயே நியமனங்கள் வழங்கப்படுகிறது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது.

மேலும், 11,000 பேர் மட்டுமே இருக்கக்கூடிய சிறைச்சாலைகளில் 40,000 பேர் வரை அடைக்கப்பட்டுள்ளதால் ஏற்படும் நெரிசலையும் அசம்பாவிதங்களையும் கட்டுப்படுத்த முடியாமல் சிறைச்சாலைகள் அமைச்சர் திணறி வருகிறார்.

தேர்தல் காலத்தில் விவசாயிகளை 'ராஜாக்கள்' எனக் கூறிய தற்போதைய ஆட்சியாளர்கள், இன்று அதிகார போதையில் அவர்களை 'கசிப்புகாரர்கள்' எனக் கூறி அவமதிக்கின்றார். அரசாங்கத்தின் இத்தகைய பொய்களுக்கும் ஏமாற்றுகளுக்கும் எதிராக இலட்சக்கணக்கான மக்களை வீதியில் இறக்கிப் போராட ஐக்கிய மக்கள் சக்தி தலைமை தாங்கும் என்றார்.