நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு: அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யும் என நம்பிக்கை – சட்டத்தரணிகள் சங்கம்



நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யும் என நம்புவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய, உத்தேச திருத்தத்திற்கு சட்டத்துறை எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான காரணங்களை ஜனாதிபதியிடம் விரிவாக எடுத்துரைத்ததாகக் கூறினார்.

இவ்வாறான மாற்றம் சட்டத்துறையினரை மாத்திரமன்றி கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய விரிவான ஆலோசனையின் பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தமது இறுதிக் கோரிக்கையாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலைப்பாடு எந்தவொரு தனிநபருக்கும் எதிரானதல்ல என்றும், “இது யாருக்கும் எதிரான போராட்டம் அல்ல” என்றும் அவர் வலியுறுத்தினார்.

இரு தரப்புக்கும் இடையில் இறுதி இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்றாலும், கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த விவகாரம் சாதகமான திசையில் நகரும் என நம்புவதாக ராஜீவ் அமரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.