பேருந்து தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்தினால் சட்ட நடவடிக்கை – பொலிஸார் எச்சரிக்கை


பேருந்து தரிப்பிடங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்திவைக்கும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேருந்து தரிப்பிடங்களில் ஏனைய வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகள் வீதியின் நடுப்பகுதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசலும் பயணிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஏற்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, சாதாரண பேருந்து தரிப்பிடத்திற்கு 30 மீற்றருக்குள்ளும், அதன் வெளியேறும் பகுதியிலிருந்து 15 மீற்றருக்குள்ளும் வாகனங்களை நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

பேருந்துகளுக்கென தனியான தரிப்புப் பகுதி (Bus Bay) உள்ள இடங்களில், தரிப்பிடத்திலிருந்து 15 மீற்றருக்குள்ளும், வெளியேறும் பகுதியிலிருந்து 10 மீற்றருக்குள்ளும் வாகனங்களை நிறுத்த முடியாது.

சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களுக்கான வசதிகளுடன் கூடிய பேருந்து சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பேருந்து தரிப்பிடங்களை மறித்து வாகனங்களை நிறுத்துவது மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பயணிகளின் பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.