இறக்குமதி அழகுசாதனப் பொருட்கள், காலணிகள் மீது சோதனை



இறக்குமதி செய்யப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மற்றும் காலணிகள் குறித்து விசேட அவதானம் செலுத்தி, நாடு முழுவதும் விசேட சோதனைகள் மற்றும் விசாரணை வேலைத்திட்டம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முன்னெடுத்துள்ளது.
 
அதற்கமைய, கடந்த 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் 108 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன்போது, பொருட்கள் பெறப்பட்ட விபரத்தை உறுதிப்படுத்தும் முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறிய 84 வணிக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை அறிவித்துள்ளது.

இந்தச் சோதனைகளின் போது, இறக்குமதி செய்யப்பட்ட சருமத்தை வெள்ளையாக்கும் பூச்சுகள், முகம் மற்றும் உடல் பூச்சுகள், வாசனை திரவியங்கள், முடி பாதுகாப்பு பூச்சுகள், விளையாட்டுச் காலணிகள் மற்றும் ஏனைய இறக்குமதி செய்யப்பட்ட காலணிகள் உட்பட பல்வேறு பொருட்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது, சுமார் 1.5 மில்லியன் ரூபா சந்தை மதிப்புடைய பொருட்கள் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் கடைகளுக்கு எவ்வாறு கிடைத்தன என்பதை உறுதிப்படுத்த முடியாத சோதனைகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இந்தச் சோதனைகளுக்கு மேலதிகமாக, இந்த ஆண்டில் கிரீம் மற்றும் திரவப் பொருட்கள் தொடர்பில் சுமார் 785 சோதனைகள் நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட வணிகர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள கட்டளை இலக்கம் 83 இன் படி, பொருட்களை விற்பனை செய்தல், வைத்திருத்தல் அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், களஞ்சியப்படுத்துபவர்கள் மற்றும் வர்த்தகர்கள் அப்பொருட்கள் பெறப்பட்ட விதத்தை உறுதிப்படுத்தக்கூடிய எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.

அந்த ஆவணத்தில் விநியோகஸ்தரின் பெயர் மற்றும் முகவரி, கொள்முதல் செய்யப்பட்ட திகதி, கொள்முதல் விலை, பொருளின் வகை, அளவு மற்றும் பொருத்தமான சந்தர்ப்பங்களில் தொகுப்பு இலக்கம் (Batch number) போன்ற தகவல்கள் சேர்க்கப்படுவதன் மூலம் ஒரு பொருளின் விநியோகச் சங்கிலியை அடையாளம் காண முடியும்.

இந்தச் சட்டத் தேவையின் முக்கியத்துவம் "பில் வைத்திருப்பது" மட்டுமே அல்லாமல், சந்தைக்கு வரும் பொருட்களின் விநியோகஸ்தர், இறக்குமதியாளர் மற்றும் பொறுப்பான தரப்பினர் யார் என்பதை அடையாளம் காண முடிவது சந்தை ஒழுங்குமுறைக்கும் நுகர்வோர் பாதுகாப்பிற்கும் மிகவும் அத்தியாவசியமானதாகும்.

குறிப்பாக, அழகுசாதனப் பொருட்கள் போன்ற ஒரு பொருளின் தரம் அல்லது பாதுகாப்பு குறித்துப் பிரச்சினை எழுந்தால், அதன் விநியோகஸ்தர் அல்லது இறக்குமதியாளரைக் கண்டறிவதற்கு இந்த ஆவணச் சான்றுகள் மிகவும் அத்தியாவசியமானவையாகும்.