“இந்த அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தாது; புதிய அரசியலமைப்பும் பொய்” – தயாசிறி ஜயசேகர



மாகாணசபைத் தேர்தலை இந்த அரசாங்கம் நடத்தாது என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.அதேபோல் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பதும் முற்றிலும் பொய்யானது.பதவிக்காலத்துக்குள் யாப்புருவாக்க பணிகளை முன்னெடுக்காமல் இருக்கவே அரசாங்கம் தீர்மானித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அந்த வாக்குறுதிகளை மறந்து விட்டு அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலை முன்னிலைப்படுத்திச் செயற்படுகிறது.

தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகவே நீதிபதிகளின் பதவிக்காலம் முறையற்ற வகையில் அதிகரிக்கப்படுகிறது. பதவிக்காலத்தை அதிகரித்தவுடன் நிலுவையில் உள்ள 11 இலட்ச வழக்குகள் ஒரே மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்படுமா ?

தமக்கு தேவையான நீதிபதிகளை பதவியில் வைத்துக் கொள்வதற்காகவே இவ்வாறு பதவிக்காலம் நீடிப்பு வழங்கப்படுகிறது.இதனால் மக்களுக்கு ஏதும் கிடைக்காது.இறுதியில் நீதித்துறையின் சுயாதீனமே பலவீனப்படுத்தப்படும்.

ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாகவும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த பணிகளை முன்னெடுத்து புதிய அரசியலமைப்பை விரைவாக உருவாக்குவதாகவும் மக்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது. இந்த வாக்குறுதிகள் தொடர்பில் அரசாங்கம் தற்போது ஏதும் குறிப்பிடுவதில்லை.

மாகாணசபைத் தேர்தலை இந்த அரசாங்கம் நடத்தாது என்பதை உறுதியாக குறிப்பிட முடியும். எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்று ஆராயும் பாராளுமன்ற செயற்குழு காலத்தை தொடர்ந்து இழுத்தடிப்புச் செய்கிறது.அடுத்த மாதம் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.ஆனால் அதற்கான சாத்தியம் தென்படவில்லை. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான பணிகளை இந்த பதவிக்காலத்துக்குள் முன்னெடுக்காமல் இருக்கவே இந்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றார்.