நீதித்துறையின் சுதந்திரத்தை சீரழித்து அதிகாரத்தைத் தக்கவைக்க அரசாங்கம் முயற்சி – ஹேஷா விதானகே


நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்தைச் சீரழிக்கும் வகையிலான அரசியலமைப்புத் திருத்தங்களைக் கொண்டுவந்து தங்களது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (14) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையே இடம்பெற்ற சந்திப்புத் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஒருதலைப்பட்சமான தகவல்களையே வெளியிட்டுள்ளது.

நாட்டின் முதன்மைப் பிரஜைக்கும் சட்டத்தரணிகள் சமூகத்திற்கும் இடையே நடைபெற்ற முக்கியமான இந்த கலந்துரையாடலில், ஜனாதிபதியின் கருத்துக்கள் மட்டுமே வெளிவந்தது மக்களுக்குச் செய்யப்பட்ட அநீதியாகும்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றியே தீருவேன் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி பிடிவாதமாக உள்ளார். ஆனால், இந்த திருத்தத்தால் நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் எதிர்காலத்தில் உருவாகும் ஆபத்துகள் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் விரிவாக விளக்கியுள்ளது.

தேவைப்பட்டால் பதவியை விட்டு விலகவும் தயார் என ஜனாதிபதி கூறுகிறார். சட்டம் அறிந்த அனைவரும் எதிர்க்கும் ஒரு விடயத்துக்காக ஜனாதிபதி ஏன் இவ்வளவு பெரிய ஆபத்தான முடிவை எடுக்கவேண்டும்?

நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவுபடுத்துவதற்கே இந்த திருத்தம் கொண்டுவரப்படுவதாக அரசாங்கம் கூறும் தர்க்கம் முற்றிலும் பொய்யானது. வழக்குகளை விரைவுபடுத்த வேண்டுமானால் நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அவற்றுக்கான வசதிகளை மேம்படுத்துவதே சரியான வழியாகும். அதை விடுத்து, சரிந்துவரும் தமது அரசியல் செல்வாக்கை மீட்டெடுப்பதற்கே ஜனாதிபதி முயல்கிறார்.

அரசாங்கத்தால் எதிர்க்கட்சியை ஒடுக்க முடியும் என்ற நிலை இங்கு இல்லை. பெற்ற மக்கள் ஆணையைக் கட்டாயப்படுத்தி வீணடித்ததால் அரசாங்கம் தனது மக்கள் செல்வாக்கை முற்றிலும் இழந்துவிட்டது. மக்கள் செல்வாக்கை இழந்த அரசாங்கத்தால் பலமடைந்து வரும் எதிர்க்கட்சியை ஒருபோதும் அடக்க முடியாது.

இனிவரும் எந்தவொரு தேர்தலிலும் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்துள்ளதாலேயே, 20 வருடங்களுக்கு ஆட்சியில் இருப்போம் என்றும், இனித் தேர்தல்கள் நடக்காது என்றும் ஜனநாயகத்திற்கு எதிரான கருத்துக்களை அரசாங்கத்தின் அமைச்சர்கள் பேசி வருகின்றனர்.

ஜனாதிபதி என்ற வகையில் நாட்டின் ஜனநாயகத்தையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாதுகாப்பதே உங்களது முதன்மைப் பொறுப்பாகும். சில அமைச்சர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு நீதித்துறையில் தலையிடுவதையோ, சட்டத்தரணிகள் சங்கத் தலைவரை அச்சுறுத்துவதையோ நிறுத்த வேண்டும்.

கடந்த கால ஆட்சியாளர்களின் தவறுகளுக்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான சரியான கட்டமைப்பை உருவாக்க அரசாங்கம் முயன்றால், அதற்கு எதிர்க்கட்சியாகிய நாங்கள் முழுமையான ஆதரவை வழங்கத் தயார். மாறாகத் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள நீதித்துறையின் சுதந்திரத்தைச் சீரழிக்கும் அரசியல் பேரம் பேசுதல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கிறோம் என்றார்.