நபர்கள் மாறலாம் ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்றென்றும் ஆட்சியில் இருக்கும் – அமைச்சர் லால் காந்த


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் மீண்டும் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், தான் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் அரசியலில் தொடர்ந்து செயற்படுவேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடுவதற்கு ஆரம்பத்தில் தான் திட்டமிடவில்லை என்றும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கோரிக்கையைத் தொடர்ந்தே போட்டியிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, ஜனாதிபதி அடுத்த தேர்தலில் போட்டியிடாமல் இருக்க முடிவு செய்தாலும், தேசிய மக்கள் சக்தியில் தேர்தலில் போட்டியிட வேறு நபர்கள் இல்லை என்று அர்த்தமல்ல என லால் காந்த கூறினார்.

ஒரு தனிநபர் பதவியில் நீடிப்பதும், ஓர் அரசியல் இயக்கம் ஆட்சியில் தொடர்வதும் இருவேறு விடயங்கள் எனத் தெரிவித்த அவர், தற்போதைய அரசியல் சூழ்நிலையின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது அமைச்சர் பதவியிலிருந்து விலகுவது அரசியலிலிருந்து விலகுவதாக அர்த்தமல்ல என்றும் லால் காந்த தெரிவித்தார்.