மலேசியாவில் கைது செய்யப்பட்ட 'சிவப்பு எச்சரிக்கை' விடுக்கப்பட்ட பாதாள உலக குற்றவாளி உட்பட மூவர் இலங்கை அழைத்து வரப்பட்டனர்!


மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட சர்வதேச பொலிஸின் 'சிவப்பு எச்சரிக்கை' (Red Notice) விடுக்கப்பட்டிருந்த பிரதான பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த குற்றவாளி ஒருவர் உட்பட மேலும் இரு சந்தேகநபர்கள் திங்கட்கிழமை (10) மாலை விமான மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பொலிஸ் குழுவினர், மலேசிய பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸ் அமைப்பின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவராவார். இவர் பேராதனை மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய பகுதிகளிலும் தற்காலிகமாக வசித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இவருக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு பேராதனை பொலிஸ் பிரிவில் துப்பாக்கியைக் காட்டி நபர் ஒருவரைக் கடத்திச் சென்று கடுமையான காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் 2016 ஆம் ஆண்டு அதே பொலிஸ் பிரிவில் நபர் ஒருவரைச் சுட்டுக்கொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.

மேற்படி குற்றங்கள் தொடர்பில் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரு வழக்குகளிலும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இவர் தலைமறைவாகியிருந்ததால், நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மேலும், இவர் 2003 ஆம் ஆண்டு கல்கிஸை பொலிஸ் பிரிவில் பணக் கொள்ளைச் சம்பவத்திற்காகக் கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டவர் என்பதோடு, 2007 ஆம் ஆண்டு கைகுண்டு ஒன்றை வைத்திருந்த குற்றத்திற்காகவும் கல்கிஸை பொலிஸாரால் கைது செய்யப்பட்டவராவார்.

இச்சந்தேகநபர் மலேசியாவில் கைது செய்யப்பட்ட போது, அவருடன் இருந்த ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் மற்றும் கல்கிஸை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஆகிய இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மூவரிடமும் பொலிஸ் மா அதிபரின் நேரடி வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.