விலைப்பட்டியலை காட்சிப்படுத்துவது கட்டாயம் – வர்த்தகர்களுக்கு நுகர்வோர் அதிகார சபை அறிவுறுத்தல்


விலைப்பட்டியலை காட்சிப்படுத்துவது கட்டாயம் – வர்த்தகர்களுக்கு நுகர்வோர் அதிகார சபை அறிவுறுத்தல்

அரிசி, சீனி, பருப்பு, கடலை, பயறு, தானியங்கள், மரக்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட பொதி செய்யப்படாமல் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலைகளை வர்த்தகர்கள் தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) அறிவுறுத்தியுள்ளது.

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் 26 ஆம் பிரிவின் கீழ், பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்துவது வர்த்தகர்களின் விருப்பம் அல்ல என்றும், அது சட்டரீதியான பொறுப்பு என்றும் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

தெளிவாக விலைகளைக் காட்சிப்படுத்துவதன் மூலம் நுகர்வோர் வெவ்வேறு வர்த்தக நிலையங்களின் விலைகளை ஒப்பிட்டு, தங்களது வரவு செலவுத் திட்டத்திற்கேற்ப பொருட்களைத் தெரிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிலோகிராம், 100 கிராம் அல்லது ஒரு பொருளுக்கான விலையா என்பதையும் நுகர்வோர் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“விலையைக் கேட்பதுடன் மட்டும் நின்றுவிடாதீர்கள்; விலையைப் பார்த்து, ஒப்பிட்டு, அறிந்த பின்னர் பொருட்களை வாங்குங்கள்” என நுகர்வோருக்கு அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது