.jpg)
'செல்வந்த நாடு - அழகான வாழ்க்கை' என்ற தேர்தல் வாக்குறுதிகள் மூலம் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், மக்களுக்கு வழங்கிய பொருளாதாரச் சலுகைகள் எதையுமே நிறைவேற்றத் தவறிவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் விசனம் வெளியிட்டார்.
அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று இரு ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும், நாட்டின் வாழ்க்கைச் சுமை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
திங்கட்கிழமை (31) கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த மாதத்தில் பணவீக்கம் 7.2 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அண்மையில் பால் மா மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகளை அரசாங்கமே உயர்த்தியதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் உயர்ந்துள்ளன. பாடசாலை உபகரணங்கள், குடிநீர்க் கட்டணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாங்கும் திறன் வெகுவாகக் குறைந்து, ரூபாயின் மதிப்பும் சரிவடைந்துள்ளது. வர்த்தகர்களும் இறக்குமதியாளர்களும் தங்கள் விருப்பத்திற்கேற்ப விலைகளை உயர்த்தும் அநிச்சயமான சூழலைச் சந்தையில் அரசாங்கம் உருவாக்கியுள்ளதுடன், இது குறித்து வர்த்தக அமைச்சரும் எந்தவொரு கவலையும் கொள்ளாமல் அலட்சியமாகச் செயல்படுகிறார்.
அரசாங்கத் திறைசேரியில் பணம் நிறைந்து வழிவதாகக் கூறினாலும், அது பொதுமக்கள் மீது சுமத்தப்பட்ட அநியாய வரிகள் மூலம் திரட்டப்பட்டதே தவிர, அதனால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் மற்றும் சிறு, நடுத்தர வியாபாரிகள் என அனைவரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, நான்கு பேரைக் கொண்ட ஒரு குடும்பம் சாதாரணமாக வாழ்வதற்கு மாதத்திற்கு குறைந்தபட்சம் 150,000 ரூபா தேவைப்படுகிறது. இதனால் மூன்று வேளை உண்ட மக்கள் இன்று இரண்டு வேளையாகவும், இரண்டு வேளை உண்டவர்கள் ஒரு வேளையாகவும் உணவைக் குறைத்துக் கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்தபோதிலும், அரசாங்கம் பெட்ரோல் விலையை 15 ரூபாவினால் மட்டுமே குறைத்து தன் முகத்தைக் காப்பாற்ற முயன்றுள்ளது. வர்த்தக மற்றும் போக்குவரத்துத் துறைக்கு அத்தியாவசியமான டீசல் விலையிலோ அல்லது ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலையிலோ எவ்வித குறைப்பும் செய்யப்படவில்லை. உள்நாட்டிலேயே சுத்திகரிக்கப்படும் மண்ணெண்ணெய் விலை 280 ரூபாவாக உயர்ந்துள்ள நிலையில், ஏழை மக்களுக்கு அந்தச் சலுகை கூட வழங்கப்படவில்லை. அரசாங்கம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எந்தவொரு தெளிவான திட்டமும் இல்லாமல் பொருளாதாரத்தை மிதக்க விட்டுள்ளதால், பொதுமக்கள் பேரழிவைச் சந்தித்து வருகின்றனர்.



.jpg)
.jpg)






.jpg)
