அண்மைய சம்பவங்களின் மூலம், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதாகக் கூறிவந்த பலரின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், சிலரது கொள்கைகளும் நேர்மையும் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மாறக்கூடியவை என்பது தற்போது தெளிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளால் நீடிப்பதற்கு முன்மொழியும் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் கடந்த 7ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
இந்தப் பின்னணியில், குறித்த விடயம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அலி சப்ரி, தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் சில விடயங்கள் தெளிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாட்டை முன்வைப்பதும், ஆட்சிக்கு வந்த பின்னர் அதற்கு முற்றிலும் மாறான வகையில் செயற்படுவதும் தற்போது சாதாரண விடயமாகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், இவ்வாறான செயற்பாடுகள் குறித்து ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், அண்மைய சம்பவங்கள் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதாகத் தம்மைக் கூறிக்கொண்ட பலரின் உண்மை நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
“சிலரைப் பொறுத்தமட்டில், அவர்களது கொள்கைகளும் நேர்மையும் ஏலத்துக்கு உரியவைதான் என்பது இப்போது தெளிவாகியுள்ளது,” என அலி சப்ரி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையைப் போன்று, தமது நீண்டகால நம்பிக்கைகள் மற்றும் கோட்பாடுகளை முன்னிறுத்தி உறுதியுடன் நிற்பவர்கள் ஒரு சிலர் மாத்திரமே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான சிலர் தொடர்ந்தும் தமது கொள்கைகளுக்கு உண்மையாக இருப்பது நிம்மதியையும் ஊக்கத்தையும் அளிப்பதாக அலி சப்ரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.




.jpg)


.jpg)




