
இலங்கையில் காதுகேளாதோர் மற்றும் பேச்சுத்திறனற்ற சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், '119' பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவிற்கு வட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் நேரடியாக முறைப்பாடுகளைப் பதிவுசெய்யும் புதிய விசேட திட்டத்தை இலங்கை பொலிஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை பொலிஸ் சேவையின் 160 ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளின் ஒரு அங்கமாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடந்த 03 ஆம் திகதி இத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 10 ஆம் திகதி இச்சேவை பயன்பாட்டிற்கு வருகிறது.
காதுகேளாதோருக்கான விசேட குறுஞ்செய்தி இலக்கம் அறிமுகப்படுத்தப்படும் வரை, பொதுமக்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி காணொளி அழைப்பு மூலம் முறைப்பாடுகளைத் தெரிவிக்கலாம்.
உங்கள் கைப்பேசியில் 011 280 9980 என்ற தொலைபேசி இலக்கத்தைச் சேமித்துக் கொள்ளவும்.
இந்த இலக்கத்திற்கு வட்ஸ்அப் மூலம் குரல் அழைப்பு ஒன்றினை மேற்கொள்ளவும்.
அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டு, உடனடியாக உங்கள் கைப்பேசிக்கு ஒரு லிங்க் அனுப்பி வைக்கப்படும்.
அந்த லிங்கைத் திறந்து “Join Browser” என்பதைத் தெரிவுசெய்து, பின்னர் “Join Meeting” என்பதைக் கிளிக் செய்யவும்.
உடனடியாக பொலிஸ் அவசர அழைப்பு மையத்துடன் காணொளி அழைப்பு இணைக்கப்படும். அதன் மூலம் உங்கள் முறைப்பாடுகளை சைகை மொழி அல்லது எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கலாம்.
காதுகேளாதோர் மற்றும் பேச்சுத்திறனற்ற நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இச்சேவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.



.jpg)





.webp)


