ஜனாதிபதிக்கும் 159 பேருக்கும் மட்டுமே சுபீட்சம் ; நாட்டு மக்களின் வாழ்க்கை துயரத்தில் – நாமல் ராஜபக்‌ஷ


ஜனாதிபதியினதும், 159 உறுப்பினர்களினதும் வாழ்க்கையே சுபீட்சமாகியுள்ளது. நாட்டு மக்களின் வாழ்க்கை நிலை துயரமாகவே உள்ளது. அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நடைமுறையில் எந்தளவுக்கு யதார்த்தமாகியுள்ளது. மக்களை ஏமாற்றும் கற்பனை கதைகளை குறிப்பிடுவதை அரசாங்கம் இனியேனும் நிறுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஜனாதிபதி சுபீட்சம் என்று குறிப்பிடுகிறார். ஆனால் 159 பேருக்கும் ஜனாதிபதிக்கும் மட்டுமே சுபீட்சம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள்முதல் ஒவ்வொன்றுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறது. ஆனால் இது யதார்த்தமாகியுள்ளதா? கிராமிய பொருளாதாரம் முன்னேறியுள்ளதா? கிராமங்களில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வருமானம் குறைவடைந்துள்ளது. மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

எல்நினோ தொடர்பில் தற்போது குறிப்பிட்டாலும், இதற்கு முன்னர் விவசாயிகளுக்கு தேவையான நீர் வசதி மற்றும் உரம் வழங்கப்படவில்லை.அதிக பணத்திற்கு விவசாயிகள் உரத்தை பெற்றுக்கொள்ள வேண்டியேற்பட்டது. நெல்லை குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்துள்ளது. இதனால் விவசாயிகளே பாதிக்கப்பட்டுள்ளனர்.

டித்வா புயலின் போது தகரமொன்றுக்கு 10 இலட்சம் வழங்குவதாக கூறினர். இப்போது நேபளத்திற்கும் உதவி வழங்குவதாக கூறியுள்ளனர். இதிலும் ஏமாற்றியுள்ளனரா என்று தெரியவில்லை. நேபாளத்தை அவ்வாறு ஏமாற்றிவிட வேண்டாம் என்று கேட்கின்றோம்.

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நடைமுறையில் நடக்கின்றதா? என்று பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் 50 பல்கலைக்கழகங்களை அமைப்பதாக குறிப்பிடப்பட்டது.யாரை ஏமாற்ற முயற்சிக்கின்றீர்கள்?கொத்தமல்லியை குடித்து வீட்டில் இருக்குமாறு ஜனாதிபதி கூறுகின்றார். இப்போது வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லை. வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை கொடுக்காமல் வருடத்திற்கு 8 கோடி மக்கள் வைத்தியசாலைகளுக்கு வருவதாக கூறுகின்றனர். இவர்களை கொத்தமல்லியை குடித்து வீட்டில் இருக்குமாறு கூறுவதற்கு ஜனாதிபதிக்கு உரிமையில்லை.

இப்போது நாட்டில் இணையத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன. கல்வி அமைச்சருக்கும், அரசாங்கத்திற்கும் சிறுவர்களை இதில் இருந்து பாதுகாக்க தேவையான சட்ட திட்டங்களை தயாரிக்கும் பொறுப்பு உள்ளது.

தயவு செய்து மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம். கற்பனை கதைகளை கூறிக்கொண்டு மக்களை ஏமாற்ற முடியும் என நினைக்க வேண்டாம். மக்களுக்கு தாங்கிக்கொள்ளக்கூடிய வகையில் வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.