1,605 கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்கள்



நாட்டில் நிலவும் 1,605 கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோக்க பண்டார தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதேச செயலக மட்டத்தில் காணப்படும் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் புள்ளிகள் பரீட்சைத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. எழுத்து மூலப் பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சை ஆகிய இரண்டிலும் பெறப்பட்ட அதிகபட்ச புள்ளிகளின் அடிப்படையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் இவற்றுக்கான நியமனங்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 2026 மார்ச் மாதம் நடைபெற்ற பரீட்சையில் சித்தியடைந்த சுமார் 3,200 பேர் இந்த நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். புதிய கிராம உத்தியோகத்தர் சேவைப் பிரமாணக் குறிப்பு தயாரித்து அமுல்படுத்தப்பட்ட பின்னர், அதன் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்படும் முதல் குழுவினர் இவர்களாவர். இவ்வாறு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மூன்று மாத கால சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்றும், பயிற்சிக்குப் பின்னர் பிரதேச செயலகங்களில் நிலவும் பதவி வெற்றிடங்களின் தேவைக்கேற்ப அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றார்.