மின்சாரக் கட்டண நிவாரணத்திற்கு ரூ.17.2 பில்லியன் – பாராளுமன்றம் அனுமதி


மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 17.213 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வதற்கான 2026 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீட்டுக்கு பாராளுமன்றம் இன்று (23) அனுமதி வழங்கியுள்ளது.

எரிசக்தி அமைச்சுடன் தொடர்புடைய குறித்த குறைநிரப்பு மதிப்பீடு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதன் பின்னர் அங்கீகரிக்கப்பட்டதாக பாராளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான 17,213 மில்லியன் ரூபா, 2026 ஆம் ஆண்டுக்காக அமைச்சுக்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் பயன்படுத்தப்படாது என அடையாளம் காணப்பட்ட நிதியிலிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இதனால் 2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் மொத்த செலவின வரம்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த நிதி மறுஒதுக்கீடு அரசாங்கத்தின் அதிகபட்ச கடன் பெறும் வரம்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குறைநிரப்பு மதிப்பீடு நேற்று பாராளுமன்ற பொது நிதிக் குழுவினால் (COPF) பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏற்றுமதி விவசாய ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலமும் இன்று நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து திருத்தங்களின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

1992 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஏற்றுமதி விவசாய ஊக்குவிப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும்.

ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் நிறுவனக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப பதவிப் பெயர்களைத் திருத்துதல் மற்றும் தற்போதைய உற்பத்தி, சந்தை நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் ஏற்றுமதி விவசாயப் பயிர்கள் தொடர்பான வரையறைகளை புதுப்பித்தல் உள்ளிட்ட மாற்றங்கள் இதன்மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன்படி, உள்ளூர் நுகர்வுக்கு மேலதிகமாக ஏற்றுமதி வாய்ப்புகளைக் கொண்டதும், பொறுப்பான அமைச்சரினால் அறிவிக்கப்பட்ட விவசாயப் பயிராக பிரகடனப்படுத்தப்படுவதுமான பயிர்கள் “ஏற்றுமதி விவசாயப் பயிர்கள்” என்ற வரையறைக்குள் உள்ளடக்கப்படவுள்ளன.

எனினும், நெல், மரக்கறிகள், பழங்கள், கிழங்கு வகைகள் உள்ளிட்ட உணவுப் பயிர்களும் பெருந்தோட்டப் பயிர்களாக அடையாளம் காணப்படும் பயிர்களும் இந்த வரையறைக்குள் உள்ளடக்கப்பட மாட்டாது என பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.