.jpg)
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னதாக, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளராகப் போட்டியிடுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், ஜனாதிபதி பதவியை விட கட்சிக்கு விசுவாசமாக இருப்பதையே தான் தேர்ந்தெடுத்ததாகக் குறிப்பிட்டார்.
“2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது மைத்திரிபால சிறிசேன கட்சியிலிருந்து விலகி பொது வேட்பாளராகப் போட்டியிட்டார் என்பது உங்களுக்குத் தெரியும். அவருக்கு முன்னதாக எனக்கே அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதி பதவியை விட நான் கட்சியை அதிகம் நேசித்தேன். அதனால்தான் இன்றும் இந்தக் கட்சியில் இருக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மீதான தனது அர்ப்பணிப்பே, கட்சியில் தொடர்ந்தும் செயற்படுவதற்கான காரணம் என்றும் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.
கட்சியின் எதிர்காலத் தலைமைத்துவம் உட்பூசல்களால் பிளவுபட்ட குழுவிடம் அல்லாமல், ஒற்றுமையான இளம் தலைமுறையினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“இளைஞர்கள் இந்தக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறியுள்ளேன். ஆனால் அது ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் குழுவாக இருக்கக்கூடாது. ஒற்றுமையான இளைஞர் குழுவொன்றே கட்சியைப் பொறுப்பேற்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
தேவை ஏற்பட்டால் தற்போது தான் வகிக்கும் எந்தவொரு பதவியையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் நிமல் சிறிபால டி சில்வா மேலும் கூறினார்..



.jpg)





.jpg)
.jpg)
.jpg)
